‘ஹைடெக் மைனர்’தான் வேணும்னு இல்ல விவசாய மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட தயார்: கொரோனா கற்றுத்தந்த வாழ்க்கைப் பாடம்

* இளம்பெண்களிடம் ஏற்பட்ட மண(ன)மாற்றம்

சென்னை: கொரோனா பாதிப்பு, வாழ்க்கை முறையில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது. வாழ்க்கையில் மட்டுமல்ல, வாழ்க்கை துணையை தேர்வு செய்வதிலும்தான். திருமணம் என்றாலே அதிக கவனத்துடன் இருப்பது பெண்ணை பெற்றவர்கள்தான். படிப்பு, வசதி ஆகியவற்றுக்கு ஏற்ப தகுந்த நல்ல மாப்பிள்ளையை பார்த்து கட்டி வைத்து விட்டால் கவலைவிட்டது என்று நினைப்பார்கள். இதனால், இன்ஜினியரிங் படித்த பெண்ணுக்கு இன்ஜினியரிங் மாப்பிள்ளை, டாக்டருக்கு படித்தவருக்கு டாக்டர் மாப்பிள்ளை என, ஜோடி பொருத்தத்தை விட படிப்பு பொருத்தம் பார்ப்பதில் குறியாக இருப்பார்கள். பெண்களும் அப்படித்தான். தனக்கு வரும் கணவர் நன்கு படித்தவராக, கைநிறைய சம்பாதிப்பவராக இருக்க வேண்டும். அதுவும் ஐடி படித்து விட்டு அமெரிக்காவிலோ வெளிநாட்டிலோ செட்டில் ஆனால் கூட நல்லது. குறைந்தபட்சம் நகரத்தில் இருக்கும் ஹைடெக் மாப்பிள்ளை என்றால் ஓகே, என்ற மன நிலையில் இருப்பார்கள்.

 ஆனால், கொரோனா வந்த பிறகு, பாரின் மாப்பிள்ளையே வேண்டாம் என்று தலைதெறிக்க ஓடும் நிலைமை வந்து விட்டது. கொரோனாவால் கொத்துக்கொத்தாக செத்து விழுவதை பார்த்ததும் அப்படி ஒரு பயம், பதைபதைப்பு தொற்றிக் கொண்டது. நகரத்து வாழ்க்கையில் அவ்வளவு ஆபத்து இல்லாவிட்டாலும், ஐடி நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களை நம்பித்தான் பிழைப்பை ஓட்டுகின்றனர். எப்போது வேலை போகுமோ என்ற கவலையும் உள்ளது.  இதெல்லாம் சேர்ந்து, பெண்களின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டதை நாட்டின் சில பகுதிகளில் காண முடிகிறது. உதாரணமாக, மகாராஷ்டிரா மாநிலம் சடாரா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இளம் விவசாயி மாப்பிள்ளைகளுக்கு படு கிராக்கி ஏற்பட்டுள்ளது என, திருமண தகவல் மையம் நடத்தும் சிலர் தெரிவிக்கின்றனர்.

 பொதுவாக பெண் வீட்டார் நல்ல நிறுவனத்தில் பணிபுரியும், படித்த மாப்பிள்ளைதான் வேண்டும் என அடம்பிடிப்பார்கள். தற்போது கொரோனாவால் பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நன்கு வசதியான இளம் விவசாயிகள் இருந்தால் போதும் என்று கூறுகின்றனர். அந்த இளம் விவசாயி படித்தவராக இருந்தால் கூடுதல் டிமான்ட் உள்ளது.  முன்பெல்லாம் விவசாயி குடும்பங்களில் பெண்ணை கொடுப்பதற்கு நிறைய யோசிப்பார்கள். பெரும்பாலும் மற்றொரு விவசாய குடும்பத்தில் இருந்துதான் பெண் எடுக்க வேண்டி வரும். இப்போது நகரத்து பெண்கள் கூட விவசாய மாப்பிள்ளையை மணக்க சம்மதம் தெரிவிக்கின்றனர்.

 கொரோனாவுக்காக தற்காலிகமாக இந்த டிரண்ட் ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும், கொரோனா பாதிப்பால் பொருளாதார பாதிப்பு ஓராண்டுக்கு மேல் தொடருமானால், இதனால் பாதிக்கப்பட்டு பலர் வேலை இழக்கும் பட்சத்தில், விவசாய மாப்பிள்ளைக்கு கண்டிப்பாக கிராக்கி அதிகரிக்கும். அதோடு, வேலை தேடி நகரங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கிராமத்தில் விவசாயத்தை நோக்கி திரும்பும் காலம் வரும். இது ஆச்சரியமான மாற்றம் மட்டுமல்ல... வரவேற்கத்தக்கதும் கூட என திருமண தகவல் மையம் நடத்துவோர் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>