×

‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டம் குறித்து திண்டுக்கல், தூத்துக்குடி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: கொரோனா பாதிப்பு குறித்தும், திமுகவினர் மேற்கொண்ட நிவாரண உதவிகள் குறித்தும் திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கொரோனா பேரிடர் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கோடு திமுக சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டம் குறித்து காணொலிக் காட்சி மூலம் தினமும் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக நேற்று ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள, பொதுமக்களுக்கான உதவி எண்ணான “90730 90730” என்ற அலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு பொதுமக்கள் தெரிவித்த குறைகள் மற்றும் பிரச்னைகளுக்கு எட்டப்பட்ட தீர்வுகள் குறித்து, திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம், தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியக் குழுத் தலைவர்கள் ஆகியோரைக் காணொலிக் காட்சி மூலமாகத் தொடர்புகொண்டு விசாரித்தறிந்தார். ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்தப் பாடுபடும் நிர்வாகிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த ஸ்டாலின், அப்பணி மேலும் செம்மையாக நடைபெற தமது ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

பின்னர், அவர், ஒன்றிணைவோம் வா என்ற செயல்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயன்பெற்ற பொதுமக்கள் 50 பேரிடம் காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். அப்போது, அவர்களின் நலன் விசாரித்த திமுக தலைவர், அவர்களுக்குக் கிடைத்த உதவிகள் குறித்தும், அவர்கள் பகுதியில் கொரோனா நோயின் தாக்கம் மற்றும் ஊரடங்கு குறித்தும் விசாரித்தறிந்தார். பின்னர், ஊரடங்குக் காலத்தில் அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து பிற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதோடு, ‘தமிழக மக்களுக்கு தி.மு.க. எப்போதும் துணை நிற்கும்’ என உறுதியளித்தார்.

Tags : MK Stalin ,DMK ,consultation ,executives ,Tuticorin ,Dindigul , Dindigul, Thoothukudi, DMK leader MK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...