×

சேலம், விழுப்புரம், திருவாரூர், நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு: கலெக்டர்கள் உத்தரவு

சென்னை: சேலம், திருவாரூர், நாகை, பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் முழு ஊரடங்கை கலெக்டர்கள் பிறப்பித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி, தமிழகத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அதன்பேரில், சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் இன்று தொடங்கி 29ம் தேதி வரையில் முழுஊரடங்கு அமல்படுத்தப்படும். சேலம், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்தநிலையில், திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு நாள் முழு ஊரடங்கு அனுசரிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று முதல் 29ம் தேதி வரையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நேற்றும் இன்றும் முழு ஊரடங்கு அனுசரிக்கப்படுகிறது. இதேபோல், தஞ்சை, நெல்லை மாநகராட்சி பகுதிகளில் இன்று (26ம் தேதி) ஒரு நாள் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அனைத்து நகராட்சி பகுதிகளில் 100 சதவீதம் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறியவர்கள் கைது வாகனங்கள் பறிமுதல்
சேலம் மாவட்டத்தில் 25, 26ம் தேதிகளில் முழு ஊரடங்கு என மாவட்ட கலெக்டர் ராமன் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி சேலம் மாவட்டத்தில் நேற்றே முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. கடைகள் மூடப்பட்டிருந்ததால் நேற்று காய்கறி, மளிகைப்பொருட்கள் வாங்க வெளியே வந்தவர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பினர்.மேலும் தடையை மீறி வெளியே வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். சில பகுதிகளில் சாலையில் சுற்றியவர்களை போலீசார் கைது செய்தனர். காய்கறி கடைகள் மூடலால் நாள் ஒன்றுக்கு 500 டன் வீதம், 4 நாட்களுக்கு 2 ஆயிரம் டன் காய்கறிகள் வீணாக போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : districts ,Villupuram ,Collectors ,Salem ,Thiruvarur ,Nagai , Full curfew ,seven districts including Salem, Villupuram, Thiruvarur, Nagai
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை