மதுரையின் முக்கியத் திருவிழாவான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து: இரு நிகழ்வுகளை மட்டும் இணையத்தில் ஒளிபரப்ப முடிவு

மதுரை: மதுரையின் முக்கிய திருவிழாவான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையின் மகுட விழா என்ற பெருமைக்குரியது சித்திரைத் திருவிழா.  கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருவிழாவை ரத்து செய்து, மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை 4 சிவாச்சாரியார்கள் மட்டுமே சமூக இடைவெளி பேணி நடத்துவதென்றும், இதனை கோயில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்வதாகவும் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது.மதுரை அழகர்கோயிலில் சித்திரைப் பெருவிழா மே 3ல் தொடங்கி நடப்பதாக இருந்தது. அழகர் மதுரை வந்து, வைகையாற்றில் இறங்கும் முக்கிய நிகழ்வு குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

 இதற்கிடையில் அழகர் கோயில் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், இதனை தேசிய பேரிடராக அறிவித்து, இதன் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இச்சூழ்நிலையில், சமூக இடைவெளி பின்பற்றப்படுவது கட்டாயம் என்பதை கருத்தில் கொண்டு, இவ்வாண்டு சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுகிறது. அதாவது, முக்கிய வைபவங்களான அழகர் மதுரை புறப்பாடு, தல்லாகுளத்தில் எதிர்சேவை, வைகையாற்றில் எழுந்தருளல், ராமராயர் மண்டகப்படியில் தண்ணீர் பீய்ச்சுதல், வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் எழுந்தருளல், தேனூர் மண்டபத்தில் நடைபெறும் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல், ராமராயர் மண்டகப்படி தசாவதார நிகழ்ச்சி, மைசூர் மண்டகப்படி பூப்பல்லக்கு ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்தாகிறது. எனினும், பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பல்லாண்டு காலமாக நடைபெற்ற உலகப்புகழ்பெற்ற இத்திருவிழா இடையில் நின்று போகாமல் காக்கும் வகையில் கோயில் பட்டாச்சாரியார்களின் கருத்துகள் கேட்கப்பட்டன.

+

இதன்படி மே 8ம் தேதி, முக்கிய நிகழ்வான மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி ஆகியவை மட்டும், கோயில் பட்டாச்சாரியார்கள், பணியாளர்களைக் கொண்டு கோயில் உட்பிரகாரத்தில் நடத்தப்படும். இந்நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. எனவே, www.tnhrce.gov.in  என்ற இணையதளம், யூடியூப் மற்றும் முகநூல் மூலமாக நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்கள் இல்லங்களில் இருந்தே நிகழ்ச்சிகளை பார்த்து அழகரின் அருள்பெற வேண்டுகிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>