×

கோவையில் ஒரு லிட்டர் ‘கள்’ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை: தோப்புகளில் காத்து கிடக்கும் ‘குடி’ மகன்கள்

கோவை: கோவை மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில், கள்ளச்சாராயம் மற்றும் ‘கள்’ விற்பனை அதிகரித்துள்ளது. தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, மதுக்கரை, கோவில்பாளையம், அன்னூர், சூலூர், கருமத்தம்பட்டி வட்டாரங்களில் கள் இறக்கி விற்பனை செய்யப்படுகிறது. மதுபான கடைகள் பயன்பாட்டில் இருந்தபோது ஒரு லிட்டர் ‘கள்’ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது, தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. ‘கள்’ வாங்க ‘குடி’மகன்கள் தென்னந்தோப்புகளில் பல மணி நேரம் காத்து கிடக்கின்றனர். மரங்களில் ஏறி, அத்துமீறி ‘கள்’ இறக்கிவிடாமல் இருக்க தென்னந்தோப்புகளில் காவல் போடப்பட்டுள்ளது. சில தென்னந்தோப்புகளில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் மற்றும் தெரியாத நபர்கள் வந்தால் தகவல் தெரிவிக்க ஆட்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுபற்றி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கூறுகையில், ‘கள்’ விற்பனை செய்யும் இடங்களை அடிக்கடி மாற்றி விடுகிறார்கள். வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி எங்கே விற்பனை செய்கிறார்கள் என தெரிந்துகொண்டு செல்கிறார்கள். மாவட்ட அளவில் ‘கள்’ விற்பனை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 200க்கும் மேற்பட்ட தென்னந்தோப்புகளில் ஆய்வு நடத்தப்பட்டது. ‘கள்’ இறக்க பயன்படுத்திய பானைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ‘கள்’ இறக்க அனுமதித்தால் தோட்ட உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது என்றனர்.

Tags : sons ,Coimbatore ,liter 's' sale ,grove , Coimbatore, s, sales
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்...