×

சென்னை பெண் டாக்டரை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் கைது; 100க்கும் மேற்பட்ட பெண்களை வலையில் வீழ்த்தியது அம்பலம்: வாலிபரின் கூட்டாளிகளை நெருங்கும் போலீசார்

நாகர்கோவில்: சென்னை பெண் டாக்டரை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் காசி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட பெண்களை தனது வலையில் வீழ்த்தியிருக்கலாம் என்றும், அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணேசபுரம் பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசி என்ற சுஜி (26). இவர் சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரிடம் பழகி அவரை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் அளித்த புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து காசி என்ற சுஜியை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: காசி என்ற சுஜி சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பல போலி ஐடிகள் அவரால் உருவாக்கப்பட்டுள்ளளன. அந்த பக்கங்களில் அவர் தனது கவர்ச்சிகரமான மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அவரது உடற்பயிற்சி காட்சிகள் தொடர்பான வீடியோக்களையும் பதிவேற்றம் செய்துள்ளார். காசி பொதுவாக பணக்கார மற்றும் படித்த இளம்பெண்களை குறிவைத்து தனது நட்பு வட்டத்தில் இணைத்துள்ளார். சமூக ஊடகங்களில் முக்கியமாக சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் பெண்களை தனது நண்பர்களாக மாற்றியுள்ளார். பின்னர் அந்த சமூக ஊடகங்கள் மூலம் இளம்பெண்களுடன் அடிக்கடி சாட்டிங் செய்து அவர்களுடன் பேசியுள்ளார். அவர்களிடம் தான் மிகுந்த அக்கறை மற்றும் அனுதாபம் உள்ளவன் என்று பேசுவதன் மூலம் பெண்களை ஏமாற்றியுள்ளார்.

அன்பான முறையில் பழகி அவர்களின் தனிப்பட்ட தொடர்பு எண்களையும் பெற்றுள்ளார். பின்னர் தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ் அப் வீடியோ அழைப்புகள் மூலம் அவர்களிடம் தொடர்பில் இருந்துள்ளார். பெண்களுடன் நட்பு உறவு அடிப்படையில் பழகிய காசி பின்னர் அந்த பெண்களை நேரடியாக சந்திக்க தொடங்கியுள்ளார். அப்போது பலருடன் உடல் ரீதியாகவும் நெருக்கமாக இருந்துள்ளார். அப்போது அவர்களுடன் நெருக்கமான இருந்த நேரங்களில் அந்த காட்சிகளை புகைப்படங்களாக எடுத்து வைத்துள்ளார். மேலும், தனியாக இருந்தபோது அவர்களுடன் வீடியோ சாட் செய்து வீடியோவின் போது அவர் எடுத்த நிர்வாண புகைப்பட ஸ்கிரீன் ஷாட்கள் எடுத்து அதனை செல்போனில் சேமித்து வைத்துள்ளார். மேலும் சில சமயங்களில் அப்பாவி பெண்கள் தங்கள் தனிப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பின்னர், தனது அவசர மருத்துவ தேவைகள் அல்லது வேறு சில காரணங்களுக்காக அந்த பெண்களிடம் பணம் கேட்பதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். அவரது உண்மையான முகத்தை அறியாத பெண்கள் அவரை நம்பி பணம் வழங்கியுள்ளனர். இவ்வாறு அவர் லட்சக்கணக்கான பணத்தை பெண்களிடம் இருந்து பணத்தை மிரட்டி பறித்துள்ளார். பல அப்பாவி பெண்கள் அவரது ஏமாற்றும் தன்மையை உணர்ந்துள்ளனர். மேலும் அவரது மோசடி முறை பற்றி அவர்களது நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டனர். பின்னர் காசியின் அழைப்புகளை முற்றிலும் நிராகரித்து அவரை முற்றிலும் தவிர்க்கவும் செய்துள்ளனர்.
அவ்வாறு பெண்கள் அவரைத் தவிர்க்கத் தொடங்கும் போது, அவர் பெண்களின் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்றும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.

வெளியிடாமல் இருக்க அதிக பணம் கொடுக்க வேண்டும் என்றும் அச்சுறுத்தியுள்ளார். அவ்வாறு பணம் கொடுக்காத பெண்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவர் மீது தைரியமாக புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக காசி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது கூட்டாளிகள் தொடர்பான விரிவான விசாரணை, அடையாளம் காணல், போலி சமூக ஊடக கணக்குகள் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை மீட்டெடுப்பது நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.


Tags : doctor ,Chennai ,women ,partners , Porn movie, kazi suji, arrested, cops
× RELATED பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்