சேலத்தில் 4 நாட்கள் முழு ஊரடங்கு; உழவர்சந்தை, மார்க்கெட் மூடுவதால் காய்கறி விவசாயிகள் கடும் பாதிப்பு: தினமும் 500 டன் வீணாகும்

சேலம்: சேலத்தில் 4 நாட்கள் முழு ஊரடங்கு காரணமாக உழவர்சந்தை, மார்க்கெட் மூடப்படுவதால் காய்கறி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தினமும் 500 டன், காய்கறிகள் வீணாகும் என்றும் தெரிவித்துள்ளனர். கொரோனா சமூக பரவலை தடுக்க சேலத்தில் 4 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மாநகர பகுதியில் இயங்கும் 4 உழவர்சந்தைகள், ஆற்றோர மார்க்கெட் உள்பட அனைத்து காய்கறி மார்க்கெட்டுகளும் மூடப்படுகிறது. இதனால், அயோத்தியாப்பட்டணம், வீராணம், வலசையூர், ஓமலூர், காடையாம்பட்டி, இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர், நங்கவள்ளி, ஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் இருந்து சேலம் உழவர்சந்தைகளுக்கும், இதர காய்கறி மார்க்கெட்டுகளுக்கும் காய்கறி வரத்து அடியோடு நிறுத்தப்படுகிறது.

இந்த காய்கறி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள், வரும் 4 நாட்களும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். தக்காளி, வெண்டை, கத்திரிகாய், புடலை, பீர்க்கங்காய், சுரைக்காய் போன்றவை அறுவடை பருவம் முற்றி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக சேலம் மாநகர் மற்றும் புறநகர பகுதியில் உள்ள உழவர்சந்தைகள், காய்கறி மார்க்கெட்களுக்கு தினமும் குறைந்தது 500 டன் காய்கறிகள் விவசாயிகளால் நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த 500 டன் காய்கறியும் தினமும் வீணாகிறது. இதுபோக காய்கறி மொத்த வியாபாரிகள், பிற மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்து வரும் காய்கறிகளும் வராது. ஏற்கனவே கொள்முதல் செய்து வைத்துள்ள தக்காளி, கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி காய்கறி விவசாயிகள் கூறுகையில், “சேலத்தில் உள்ள உழவர்சந்தைக்கு தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகளை கொண்டு வந்து அரசு நிர்ணயித்த விலையில் விற்கிறோம். தற்போது, 4 நாட்கள் சந்தை கிடையாது என்பதால், செடியில் இருந்து காய்கறிகளை பறிக்காமல் அப்படியே விட வேண்டியுள்ளது. இதில், தினமும் பறிப்பதற்கு தயாராக விளைந்து நிற்கும் வெண்டை, தக்காளி, புடலை உள்ளிட்டவை வீணாகும். ஊரடங்கில் இவ்வகையிலான இழப்பையும் ஏற்க வேண்டியுள்ளது,’’ என வேதனையுடன் தெரிவித்தானர்.

Related Stories:

>