×

கொரோனா ஊரடங்கால் செட்டிநாடு கைத்தறி சேலை உற்பத்தி பாதிப்பு: வாழ்வாதாரம் இழந்த நெசவாளர்கள்

காரைக்குடி: கொரோனா ஊரடங்கால் செட்டிநாடு கைத்தறி சேலை உற்பத்தி முற்றிலும் முடங்கிய நிலையில், தயார் செய்த சேலைகளையும் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக செட்டிநாடு கைத்தறி சேலை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. காரைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கைத்தறி நெசவுத்தொழில் மற்றும் உபதொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். 700க்கும் மேற்பட்ட தறிக்கூடங்கள் உள்ளன. இங்கு 60க்கு 60 செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலை, 2க்கு 120 காட்டன் சேலை உள்பட பல்வேறு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

2 நாட்களாக தயாராகும் ஒரு சேலைக்கு ரூ.350 வரை கூலியாக வழங்கப்படுகிறது. செட்டிநாடு காட்டன் சேலைகள் டெல்லி, மும்பை, பெங்களூரு, மும்பை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்பவர்கள் இங்கிருந்து காட்டன் சேலைகளை வாங்கி செல்வார்கள். பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் நடிகைகள், செட்டிநாடு காட்டன் சேலைகள் வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் சேலை உற்பத்திக்கு தேவையான பாவு, நூல் போன்றவைகள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கைத்தறி கூடங்கள் செயல்படாமல் முற்றிலும் முடங்கி உள்ளது. இதனை நம்பி உள்ள 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ராஜீவ் காந்தி நெசவாளர் கூட்டுறவு சங்க இயக்குநர் பழனியப்பன் கூறுகையில், ‘‘ஜனவரி முதல் செப்டம்பர் வரை தான் கைத்தறி சேலை அதிகளவில் விற்பனையாகும். இந்த சீசன் நேரத்தில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், சேலை தயாரிப்பு முடங்கி உள்ளது. பாவு, நூல், சாயம், பசை போடுவது போன்ற உபபொருட்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வாங்கப்படும். தற்போது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் மூலபொருட்களை வாங்க முடியவில்லை. உற்பத்தி செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேலைகளை விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளோம். எனவே சங்க உறுப்பினர்கள் ஒவ்வொரு நபருக்கும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் வாங்கப்பட்ட கடனுக்கு 3 மாத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நெசவாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை மாவட்டம் நிர்வாகம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்’’ என்றார்.

Tags : Lifelong Weavers ,Chettinad , Corona, linen saree, production impact
× RELATED வேதியியல் பயன்பாட்டில் நவீன இந்திய உணவுகள்