×

காட்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையில் கள்ளச்சாராயம் தடுக்க இரு இடங்களில் காவல்துறை சோதனைச்சாவடி அமைப்பு: 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவு

வேலூர்: காட்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையில் கள்ளச்சாராயம் தடுக்க இரு இடங்களில் காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து 24 மணி ேநரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கள்ளச்சாராய விற்பனை தமிழகம் முழுவதும் களைக்கட்டி உள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி பிரவேஷ்குமார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்காக தனியாக டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு கள்ளச்சாராயத்தை அழித்து வருகின்றனர். இந்நிலையில் காட்பாடி அருகே தமிழக- ஆந்திரா எல்லையான பள்ளத்தூர் கிராமத்தையொட்டி உள்ள கருப்புகட்டு, மூலவலசை போன்ற காட்டு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி வெளியூர்களுக்கு கொண்டு செல்வதும், சிலர் அங்கேயே விற்பனை செய்வதால் வெளியூர்களில் சாராயம் குடிக்கவும் படையெடுத்து வந்தனர்.

இதேபோல் இங்கிருந்து பரதராமி, பூசாரிவலசை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனை முற்றிலும் தடுக்க அந்த பகுதிகளில் காவல்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைத்து தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள எஸ்பி உத்தரவிட்டார்.அதன்படி லத்தேரி- பரதராமி நெடுஞ்சாலையில் பள்ளத்தூர் அருகே மூலவலசை காட்டுப்பகுதியில்  24 மணி நேரமும் இயங்கக் கூடிய சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் பனமடங்கி காவல்நிலையத்தை சேர்ந்த ஒரு எஸ்ஐயும், ஆயுதப்படையை சேர்ந்த ஒரு காவலர், முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் என 3 பேர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல் கொட்டாளம் வனத்துறை சோதனைச்சாவடி பகுதியில் காவல்துறை சார்பில் மற்றொரு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கும் 24 மணி நேரமும் பரதராமி காவல்துறையை சேர்ந்த எஸ்ஐ உட்பட 3 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இருபுறங்களிலும் வெளியே செல்ல முடியாத வகையில் போலீசார் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதால் கள்ளச்சாராயம் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும், தொடர்ந்து கள்ளச்சாராய வியாபாரிகளை கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags : Police checkpoint ,Andhra ,Tamil Nadu ,border ,Katpadi Katpadi , Wildlife, counterfeit, checkpoint
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...