×

ஊரடங்கு உத்தரவால் கோயில் திருவிழாக்கள் ரத்து: வறுமையில் வாடும் இசைக்கலைஞர்கள்

தூத்துக்குடி: ஊரடங்கு உத்தரவால் கோயில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் வாகைகுளம் அருகே இசைக்கலைஞர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் அருகே உள்ளது திம்மராஜபுரம். இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டுப்புற இசைக்கலைஞர்கள். இவர்கள் தவில், நாதஸ்வரம், உருமி, தாரை தப்பட்டை வாசித்து வருகின்றனர். மேலும் சிலர் கிளாரினெட், டிரம்ஸ், சாக்ஸ்சாபோன் ஆகியவை இசைக்கும் கலைஞர்கள். திருமணம், சடங்கு, கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட விழாக்கள் நடந்தால் மட்டுமே இவர்களது வாழ்வாதாரம் சுமூகமாக இருக்கும். கோடை காலங்களில் பல கோயில்களில் திருவிழாக்கள் நடப்பது வழக்கம் என்பதால் இந்த காலங்களில் அவர்களது வருவாய்க்கு குறைவில்லாமல் இருக்கும்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் கொடை விழாக்கள் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த இசைக்கலைஞர்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 30 நாட்களுக்கும் மேலாக அவர்கள் வேலையின்றி, வருவாயின்றி வாடும் நிலையில் அரசின் அடையாள அட்டைகள் வைத்திருந்தும் கூட அவர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. மேலும் தனியார் வழங்கும் நிவாரணமும் கூட எதுவும் கிடைக்கவில்லை என்பதால் பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் அனைவருக்கும் உரிய நிவாரணம் மற்றும் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : musicians ,festivals ,Temple , Curfews, temple festivals, cancellations, musicians
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!