×

தென்காசி, திருவாரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என கலெக்டர்கள் அறிவிப்பு

தென்காசி: கடலூர், தென்காசி, திருவாரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளார்கள். நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, வருகிற மே 3 ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இந்த ஊரடங்கு, ஒரு மாதம் கடந்துவிட்ட போதிலும் கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை.  

இதனால், சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளில் நாளை காலை 6 மணி முதல் 4 நாட்களுக்கும், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நாளை காலை 6 மணி முதல் 3 நாட்களுக்கும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில் மேலும் சில மாவட்டங்கள் நாளை ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு;

கடலூர்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறும்பொழுது, கடலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்.  இதனால், நகரம் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஊரடங்கு காலத்தில், மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என அறிவித்துள்ளார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நாளை ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு இருக்கும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை இறைச்சி கடைகள் மட்டும் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சுந்தர் தயாளன் கூறியுள்ளார். இந்த முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். பிற கடைகள் எதுவும் திறக்கப்படாது, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கலெக்டர் ஆனந்த் அறிவித்துள்ளார். இதில் அவசர மருத்துவ சிகிச்சைக்கும், மருந்தகங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்ட மக்கள் அரசின் நெறிமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கலெக்டர் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெரம்பலூர்


பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கலெக்டர் சாந்தா அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை எந்த அனுமதி அட்டைக்கும் அனுமதி கிடையாது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ்  அறிவித்துள்ளார். முழு ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Collectors ,districts ,Thiruvarur ,Tenkasi ,Perambalur , Tenkasi, Thiruvarur, Perambalur, Full Curfew, Collectors
× RELATED சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5...