×

ஒரு கிலோ ரூ2க்கு விற்கப்படுவதால் தோட்டத்தில் வீணாகும் தக்காளி: விவசாயிகள் கண்ணீர்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால் பறிக்காமல் தோட்டத்திலேயே வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் பரவலாக காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர். சுமார் ஆயிரம் ஏக்கரில் தக்காளி, பீன்ஸ், கேரட், கத்தரி, முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய- மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளதால் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் காய்கறி கொள்முதலுக்காக வாகனங்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், காய்கறி சந்தைகளுக்கு நேரக்கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு காய்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மீதமாகும் காய்கறிகளை வீட்டிற்கு எடுத்து வருவதில் சிக்கல் உள்ளதால் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், விளைச்சலுக்கு வந்துள்ள காய்கறிகளை பறிக்காமல் அப்படியே தோட்டத்தில் விடக்கூடிய அவலநிலை காணப்படுகிறது. தேன்கனிக்கோட்டை பகுதியில் பறிப்பு தாமதத்தால் செடிகளிலேயே தக்காளி பழங்கள் அழுகி வீணாகி வருவதை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஊரடங்கு உத்தரவால் மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் காய்கறிகளை வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், ஊள்ளூர் சந்தைகளுக்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ2 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், தக்காளியை பறிக்காமல் தோட்டங்களிலேயே விட்டுள்ளதால் அழுகி வீணாகி வருகிறது. எனவே, தோட்டக்கலைத்துறை மூலம் அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : garden , Tomato, farmer
× RELATED தாவரவியல் பூங்கா புல் மைதானங்களில் புதிய மண் கொட்டும் பணி மும்முரம்