×

சம்மர் சீசனே முடியப்போகுது பிரிட்ஜ், ஏசி, ஐஸ்கிரீம் வியாபாரம் போச்சு பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டமாச்சு: கவலையில் நிறுவனங்கள்

* கடந்த கோடை சீசனில் ஏசி 20%, பிரிட்ஜ் 9%, ஐஸ்கிரீம் 12%, குளிர்பானங்கள் 11% விற்பனை அதிகரித்தது.
* மேற்கண்டவற்றின் ஆண்டு விற்பனையில், கோடையில் மட்டும் 50 சதவீதம் விற்பனையாகிறது.
* இந்த ஆண்டு மார்ச் - மே சம்மர் சீசனில் வீட்டு உபயோக பொருட்கள் 22,000 கோடி, குளிர்பானங்கள் 9,000 கோடி, ஐஸ்கிரீம் 2,500 கோடி விற்பனை இழப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி: கோடை வந்தால் போதும். வாண்டுகளுக்கு கொண்டாட்டம். என்னதான் கட்டுப்பாடு இருந்தாலும், வெயிலை சாக்காக வைத்து ஐஸ்கிரீம் ருசிக்கலாம். சிறுவர்கள் மட்டுமின்றி, ஐஸ்கிரீம் பிடிக்காத நபர்களே இருக்க முடியாது. இதுபோல், கலோரி எச்சரிக்கையோடு இருப்பவர்கள் கூட, கோடை வெயிலை தணிக்க கொஞ்சமாவது கூல்டிரிங்க் குடித்து விடுவார்கள். இதேமாதிரிதான், ஏசி, பிரிட்ஜ் விற்பனை இந்த சீசனில் கொடிகட்டிப் பறக்கும்.  இதற்கெல்லாம் ஆப்பு வைத்து விட்டது கொரோனா. பொதுவாக இந்தியாவில் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை கோடை சீசன் இருக்கும். இந்த சீசனில் நடைபெறும் வியாபாரங்களில் மேற்கண்ட ஏசி, பிரிட்ஜ், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும். ஆனால், சம்மர் சீசன் சூடுபிடிக்க தொடங்குவதற்கு முன்பே கொரோனா பரவல் இந்தியாவில் பயமுறுத்த தொடங்கி விட்டது. மார்ச் இறுதியில் ஊரடங்கு அறிவிப்பும் வந்துவிட்டது. இதனால், தொழில்துறைகள், நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

பல நிறுவனங்கள் சம்பளம் கொடுக்கக்கூட முடியாமல் திண்டாடுகின்றன.  கையில் பணமும் இல்லை, வெளியே சுற்றவும் வழியில்லை என்பதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் சம்மர் சீசன் வியாபாரங்கள் மொத்தமாக படுத்து விட்டன. வழக்கமாக சம்மர் சீசனில் மேற்கண்ட வகைகளில் மட்டும் சுமார் 32,000 கோடிக்கு வியாபாரம் நடக்கும். ஆனால், இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
 எலக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோக பொருள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், ‘‘கடந்த 3 மாதங்களில் மட்டும், ஏசி, பிரிட்ஜ் மூலம் நடைபெற வேண்டிய 22,000 கோடி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது’’ என்கின்றனர். இதுபோல், குளிர்பான நிறுவனங்களுக்கு 9,000 கோடி அளவுக்கு வியாபார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காலாண்டு மிக மோசமான ஒன்றாக அமைந்து விட்டது. பூச்சிக்கொல்லி மருந்து சர்ச்சைகள் ஏற்பட்டபோது கூட இந்த அளவு நஷ்டம் ஏற்படவில்லை. கோடை சீசன்தான் இந்த வியாபாரத்துக்கு மிக பொருத்தமானது.

ஆனால், கொரோனாவால் எல்லாமே முடங்கி விட்டது என குளிர்பான உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுபோல், ஐஸ்கிரீம் உற்பத்தி துறையில் சுமார் 2,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என அத்துறையினர் கூறுகின்றனர்.  கோடையில் மார்ச் மத்தியில் துவங்கி மே மாதம் முடியும் வரை ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனை களைகட்டும். ஐஸ்கிரீம் விற்பனை 85 சதவீதம் சரிந்துள்ளது. மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. நீட்டிக்கப்படுமா என தெரியவில்லை. ஊரடங்கை மே 4 முதல் முடிவுக்கு கொண்டுவந்தால் கூட, மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் நீடிக்கலாம். எனவே, இந்த சீசனில் விற்பனை மேலும் பாதிக்கவே செய்யும் என்ற அச்சம் உள்ளது என தொழில்துறையினர் கூறுகின்றனர்.



Tags : Bridges ,Ice Cream Business ,AC ,Companies ,Summer Season ,Bridge , Bridge, AC, Ice Cream
× RELATED வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை...