×

ஏடிபி டபுள்யு.டி.ஏ இணையவேண்டும்: பெடரர் விருப்பம்

ஜூரிச்: தொழில்முறை டென்னிஸ் வீரர்களுக்கான ஏடிபி மற்றும் வீராங்கனைகளுக்கான டபுள்யூ.டி.ஏ சங்கங்கள் ஒன்றாக இணைய வேண்டுமென்று நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் வலியுறுத்தியுள்ளார் உலகம் முழுவதும் நிலவும் ஊரடங்கு காரணமாக விளையாட்டு போட்டிகள் நடத்துவது பாதிக்கப்பட்டுள்ளது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போட்டிகள் நடைபெறாததால் தொழிலாளர்களுக்கான ஊதியம் வழங்குவது, ஒப்பந்தம் நீட்டிப்பு செய்வது ஆகியவற்றில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால் தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்கம் (ஏடிபி), வீராங்கனைகளுக்கான பெண்கள் டென்னிஸ் சங்கம் (டபுள்யு.டி.ஏ) ஆகியவை நிதி பிரச்னைகளில் சிக்கி திணறி வருகின்றன. இந்தச் சங்கங்கள் தான் வீரர், வீராங்கனைகளுக்கான தொழில்முறை சுற்றுப் பயணங்களை  தீர்மானிக்கின்றன.   

இந்நிலையில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், முன்னணி டென்னிஸ் நட்சத்திரமுமான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர்,  வீரர்கள், வீராங்கனைகளுக்கு என தனித்தனியாக இருக்கின்ற டென்னிஸ் சங்கங்களான ஏடிபி, டபிள்யூடிஏ ஆகியவற்றை ஒரே சங்கமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஆண்கள் மற்றும் பெண்கள் டென்னிஸ் ஒன்றுபட்டு ஒன்றாக வர வேண்டிய நேரம் இது என்று நான் மட்டும் நினைக்கவில்லை. பலரின் விருப்பம் அது. ஆடுகளத்தில் போட்டியை இணைப்பது பற்றி நான் பேசவில்லை. ஆனால் ஆண்கள் மற்றும் பெண்களின் தொழில்முறை சுற்றுப்பயணங்களை மேற்பார்வையிடும், முடிவு செய்யும் 2  குழுக்களை (ஏடிபி மற்றும் டபுள்யூ.டி.ஏ) ஒன்றாக இணைப்பது பற்றி பேசுகிறேன். இந்த இணைப்பு நீண்ட காலத்திற்கு முன்பே நடந்திருக்க வேண்டும். எனினும்  இப்போது சரியான நேரம். டென்னிஸ் மட்டுமல்ல ஒவ்வொரு விளையாட்டுக்கும் இந்த ஊரடங்கு காலம், கடினமான காலமாக உள்ளது. மேலும் 2 பலவீனமான சங்கங்கள் ஒரே சங்கமாக இணைவதின் மூலம் நாம் இதிலிருந்து மீள முடியும்.

அதுமட்டுமல்ல, இப்போதுள்ள வெவ்வேறு தரவரிசை பட்டியல்கள், லோகோக்கள், வலைத்தளங்கள், வெவ்வேறு போட்டி பிரிவுகள் ஆகியவை ரசிகர்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது.  இவ்வாறு பெடரர் கூறியுள்ளார். அவரது கருத்தை முன்னணி நட்சத்திரங்கள் சிமோனா ஹாலெப் (ருமேனியா), நிக் கிர்கியோஸ் (ஆஸ்திரேலியா) வரவேற்றுள்ளனர். 


Tags : WTA ,Federer , ATPWDA, Federer
× RELATED தமிழ்ச் சுவடியியல் (ம) பதிப்பியல்...