×

மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் சென்னை உட்பட 4 நகரங்களில் வைரஸ் தொற்று தீவிரமாக உள்ளது

புதுடெல்லி: அகமதாபாத், சூரத், ஐதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர நிலையில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டில் கொரோனா தொற்று அதிகமுள்ள ஹாட்ஸ்பாட் மாவட்டங்களை கண்காணிக்க 10 அமைச்சரவை மத்திய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுவினர் சென்னை, அகமதாபாத், சூரத் (குஜராத்), தானே (மகாராஷ்டிரா), ஐதராபாத் (தெலங்கானா) உள்ளிட்ட 10 மாவட்டங்களை கண்காணித்து வருகிறது. இவற்றில் குறிப்பாக அகமதாபாத், சூரத், சென்னை, ஐதராபாத்தில் வைரஸ் தொற்று தீவிரமாக உள்ளது.

பொதுமக்கள் நலன் கருதி, மத்திய குழு ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் கள ஆய்வு நடத்தி, மாநில அரசுகளுக்கு போதிய அறிவுறுத்தல்களை வழங்கி, நோய் தொற்று தொடர்பான புள்ளிவிவரங்களை மத்திய அரசிடம் சமர்பித்து வருகிறது.மேலும் பேரிடர் மேலாண்மை சட்ட அமலாக்கம், அத்தியவாசிய பொருட்களின் விநியோகம், சமூக இடைவெளி, சுகாதார கட்டமைப்புகளையும் மத்திய குழு ஆய்வு செய்கிறது. சில மாநிலங்களில் ஊரடங்கு விதிமுறைகள் மீறப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல், மார்க்கெட் பகுதிகளில் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றாமல் இருத்தல், தனிமைப்படுத்தும் மையங்களை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தல் போன்றவை நோய் தொற்றை மேலும் தீவிரமாக்கிவிடும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு இல்லாவிட்டால் பாதிப்பு 1 லட்சமாக இருக்கும்
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட அதிகாரமிக்க குழு-1ன் தலைவரும், நிதி ஆயோக் உறுப்பினருமான வி.கே.பால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த மார்ச் 21ம் தேதிக்குப் பிறகு 3 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மடங்கானது. அதைத் தொடர்ந்து மார்ச் 23ம் தேதி மக்கள் ஊரடங்கு என்ற முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. அதோடு, பயண கட்டுப்பாடு, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியதால் நோய் தொற்று பெருமளவில் அதிகரிப்பது தடுக்கப்பட்டது.

இதற்கிடையே சில இடையூறுகளால் கடந்த 6ம் தேதி மீண்டும் நோய் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்தாலும், சரியான நேரத்தில் பிரதமர் மோடி முழு ஊரடங்கை அமல்படுத்தியதாலும், நீட்டித்ததாலும் புதிதாக நோய் தொற்றுவோரின் எண்ணிக்கை கட்டுக்குள் வந்துள்ளது. இந்த முக்கிய முடிவை எடுத்திருக்காவிட்டால் இந்நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சமாக இருந்திருக்கும்’’ என்றார்.

Tags : cities ,Ministry of Health ,Chennai , Central Health Ministry, Madras, Corona
× RELATED தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை...