×

ஆந்திராவில் தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து தமிழக எல்லை கிராமங்களுக்கு வந்து செல்லும் வாகன ஓட்டிகள்: கொரோனா தொற்று பரவும் அபாயம்

சென்னை: ஆந்திராவில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து, தமிழக எல்லை பகுதி கிராமங்களுக்கு ஆந்திர வாகன ஓட்டிகள் வந்து செல்வதால், கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மாவட்டத்தில் இதுவரை 50 பேருக்கு கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவல் கட்டுப்படுத்தும் வகையில்  மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, ஆந்திரா எல்லை பகுதியில் அமைந்துள்ள பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பேரூராட்சிகளில்  முழு வீச்சில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றது.

தினமும்  கிருமி நாசினி தெளித்தல், பேரூராட்சி முழுவதும்  தடுப்பு வேலி அமைத்து பொதுமக்கள் நடமாட்டம்  கட்டுப்படுத்தும் வகையில்  பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், ஆந்திராவிலிருந்து தமிழக கிராமங்களுக்கு வரும்  மாநில, மாவட்ட எல்லைகளில் 7 பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் மற்றும் சுகாதார துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் எல்லையில் உள்ள நகரி, புத்தூர் பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் ஆந்திர அரசு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ளது. இருப்பினும், பொதுமக்கள்  எல்லை கிராம சாலைகள் வழியாக தமிழக கிராமங்களுக்கு வந்து செல்கின்றனர். இதனால்,  நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல்,   கிராமங்களிலிருந்து  பல்வேறு மாநிலங்களுக்கு வேலை தேடி குடிபெயர்ந்தவர்கள் வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்து தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக இரு மாநில கிராம சாலைகள் துண்டித்தும்,  எல்லை கிராம மக்களுக்கு  மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  எல்லை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,Andhra Pradesh ,areas ,border villages ,Tamil Nadu , Andhra Pradesh, Tamil Nadu border, Corona
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...