×

கோவையில் 6 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு: போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன் மூடல்

கோவை: கோவையில் 6 போலீசாருக்கு கொரோனா நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டது. கோவை போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் இரண்டு ஆண் போலீஸ்காரர்கள் மற்றும் ஒரு பெண் போலீசுக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதேபோல், போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணியாற்றி வரும் ஒரு பெண் போலீசுக்கும், ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் ஒரு பெண் போலீசுக்கும், குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் ஒரு ஆண்  போலீஸ்காரருக்கும் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 6 போலீசாரும் போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள செக்போஸ்ட் மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து நோய் அபாயம் கருதி போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன் நேற்று சீல் வைக்கப்பட்டு, மூடப்பட்டது. சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவில் பணியாற்றிய அனைத்து போலீசாரும் போத்தனூர்  ஸ்டேஷன் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன் இயங்குகிறது. நோய் பாதிப்புக்கு ஆளான போலீஸ்காரர்கள் போத்தனூர், பி.கே.புதூர்,  கருமத்தம்பட்டி, சரவணம்பட்டி,  பன்னிமடை பகுதியில் வசிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு கட்டுப்படுத்துதல் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே பொதுமக்கள் வந்து, செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  கோவை நகரில் ஒரே நாளில் 6 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதித்த இன்ஸ்பெக்டரின் கணவரான டிஎஸ்பி உள்பட 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த காவல் நிலையத்துக்கு பூட்டு போடப்பட்டது. இன்ஸ்பெக்டரின் கணவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் டிஎஸ்பியாக உள்ளார். இதனால் டிஎஸ்பி, அவரது டிரைவர் உட்பட முதற்கட்டமாக 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் பெண் இன்ஸ்பெக்டர் வாலாஜாவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாணியம்பாடி திரும்பியுள்ளார். அப்போது தனக்கு தரப்பட்ட இனிப்பை வீட்டு வேலைக்கார பெண் உட்பட பலருக்கும் வழங்கியுள்ளார். இதுதொடர்பாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் திரட்டி வருகின்றனர்.

Tags : Coronation: Closure of Pothanur Police Station ,policemen ,police station ,Coimbatore ,Pothanur , Coimbatore, 6 cops, corona, police station, closure
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...