×

தேவையின்றி ஊர் சுற்றுவதை தடுக்க நடவடிக்கை ஊரடங்கை மீறிய வாலிபர்களுக்கு கொரோனா பீதி ஏற்படுத்திய போலீசார்

ஆம்புலன்சிலிருந்து குதிக்க முயன்றதால் பரபரப்பு

பொங்கலூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஊரடங்கை மீறிய வாலிபர்களுக்கு கொரோனா பரிசோதனை என போலீசார் பீதி ஏற்படுத்தினர். ஆம்புலன்சில் ஏற்றியபோது வாலிபர்கள் குதிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழத்தில், ஊரடங்கு உத்தரவை மீறி ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி சாலைகளில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வலம் வந்தபடி உள்ளனர். இதை தடுக்கும் வகையில் திருப்பூர் போலீசார் நேற்று ஒரு விழிப்புணர்வில் ஈடுபட்டனர். அதாவது, விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்வதைவிட வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டனர். அதன் விவரம் வருமாறு:திருப்பூர் மாவட்டம் பல்லடம் டி.எஸ்பி. முருகவேல் உத்தரவின்பேரில் ஆய்வாளர் சுஜாதா போக்குவரத்து உதவி ஆய்வாளர் அன்பு ஆகியோர் தலைமையில் நகரின் மையப் பகுதியான 4 ரோடு சந்திப்பில் தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை தயாராக நிறுத்தி இருந்தனர். அந்த ஆம்புலன்சில் கொரோனா பாதித்த நபர் கவச உடைகளுடன் படுத்தபடி இருந்தார்.

 அதனைத்தொடர்ந்து, பல்லடம் நான்கு வழி சாலையில் சுற்றித் திரிந்த இரு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் தேவையின்றி சுற்றியது தெரியவந்தது. உடனே, ‘‘ஆம்புலன்சில் ஏறுங்கள். உங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவேண்டும்’’ என்று போலீசார் தெரிவித்தனர். இதைகேட்டு வாலிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘‘சார்... எங்களை விட்டுவிடுங்கள். வீட்டுக்கு தெரியாமல் வந்துவிட்டோம். எங்களை கொண்டு சென்றால் கொரோனா பரவிவிட்டது என வீட்டில் உள்ளவர்கள் பயப்படுவார்கள்’’ என்று கெஞ்சியபடி தெரிவித்தனர். ஆனால், போலீசாரோ விடாமல் குண்டுக்கட்டாக தூக்கி ஆம்புலன்சில் ஏற்றினர். உள்ளே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்போல் உடையணிந்த நபரை காண்பித்து அவருடன் கோவை சென்று ரத்த பரிசோதனை செய்து தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே மீண்டும் ஊருக்கு திரும்ப முடியுமென போலீசார் தெரிவித்தனர்.

இதை கேட்ட வாலிபர்கள் அலறி அடித்து கூச்சலிட்டு, எங்களை விட்டுவிடுங்கள் என ஆளுக்கு ஒரு திசையாக ஓடி கெஞ்சி கதறினர். சிறிதுநேரத்தில், கொரோனா பாதித்தவர்போல் இருந்த வாலிபர் எழுந்து, கட்டிப்பிடிப்பதுபோன்று நடித்தார். இதனால், பயந்துபோன வாலிபர்கள், தப்பித்தால் போதும் என நினைத்து கண்ணாடியை உடைத்து தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் பிடித்தனர். அதன்பின், ‘‘இனிமேல் உயிரே போனாலும் சாலையில் தேவையின்றி சுற்றமாட்டோம்’’ என போலீசாரிடம் வாலிபர்கள் உறுதியளித்தனர்.இவ்வாறு வித்தியாசமான இந்த விழிப்புணர்வு நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றது.

Tags : juveniles ,Corona ,men ,city , Corona virus, ambulance
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்