×

நடுரோட்டில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் போலீசார்: கோவையில் ஒரே வாரத்தில் 2வது சம்பவம்

கோவை: கோவையில் நடுரோட்டில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு பெண் காவலர்கள் பிரசவம் பார்த்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு  பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக கோவிந்தன், ரேவதியை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனை செல்ல அழைத்து சென்றார்.  இரவு 9.30 மணியளவில் கோவை சிங்காநல்லூர் சிக்னல் வந்தபோது, ரேவதிக்கு வலி அதிகமானது. இதனால், அலறி  துடித்தார். அப்போது அங்கு ஆத்மா அறக்கட்டளை மற்றும் ருதம்பரா அறக்கட்டளை சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியத்தை சிலர் வரைந்து கொண்டிருந்தனர்.  

உடனடியாக கோவிந்தன், அங்கிருந்த ஆத்மா அறக்கட்டளையை சேர்ந்த கந்தவேலன் என்பவரிடம் உதவி கோரினார். அவர் உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக அருகில் உள்ள தடுப்புகள் மூலம் பாதுகாப்பு அரண் அமைக்குமாறு கூறினார். மேலும் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலர்களை சம்பவ இடத்துக்கு சென்று உதவுமாறு கூறினார். அதன்பேரில் பெண் காவலர்கள் கிருஷ்ணவேணி, பேபிரோஸி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டு ரேவதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதேபோல், கடந்த வாரம் கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்திரன் என்பவர் பிரசவம் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Woman cops ,birth ,incident ,Coimbatore , Pregnancy, childbirth, female cops, Coimbatore
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி