×

அனைத்து மண்டலங்களிலும் பரவியதை தொடர்ந்து நடவடிக்கை இளம் வயதினரை குறி வைக்கும் கொரோனா: சுகாதாரத்துறை-காவல்துறை இணைந்து புது யுக்தி

சென்னை: இளம் வயதினருக்கு தான் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால், இதை தடுப்பதற்காக தமிழக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை இணைந்து கடும் உத்தரவுகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளன.தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அம்பத்தூர் மண்டலத்தில் இதுவரை நோய்த்தொற்று இல்லாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது அங்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும்  நோய் தொற்று பரவியதை தொடர்ந்து பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் நோய்த்தொற்றுக்கு பலர் ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கும் நிலையில், சென்னையில் மட்டும் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இதனால் நோய் தொற்றை தடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை ஆண்கள்     64.91 சதவீதமும் பெண்கள் 35.9 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 20 முதல் 30 வயது உடையவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 51 ஆண்கள், 29 பெண்கள் ஆகும். இதற்கு அடுத்தபடியாக 30 முதல் 40 வயது உடையவர்கள் இந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில், 65 ஆண்கள், 23 பெண்கள் ஆகும். 40 முதல் 49 வயதுடையவர்களில் 42 ஆண்கள், 24 பெண்கள் ஆகும். 50 முதல் 59 வயது உடையவர்களில் 4 ஆண்கள், 24 பெண்கள் ஆகும். 60 முதல் 69 வயது உடையவர்களில் 25 ஆண்கள், 10 பெண்கள் ஆகும்.

எனவே, இளம் வயதினர் தான் அதிக தொற்று ஏற்பட்டு உள்ளதால் அவர்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கவில்லை என்பது தெரியவருகிறது. இதை தடுப்பதற்காக தமிழக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை இணைந்து கடும் உத்தரவுகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். மேலும் நோய் தொற்று கண்டறியப்பட்ட முதல் நபரிடமிருந்து அவர்களுடன் தொடர்புடைய  அனைவரையும் கண்டறிந்து பரிசோதனை செய்யும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் முக்கிய சாலைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டும் அநாவசியமாக மக்கள் வெளியில்  நடமாடுவதை தடுக்கும் பணிகளை காவல்துறையினர் செய்து உள்ளனர்.    மேலும் காலை 6 மணி முதல் 1 மணி வரைஅத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்களும் மாஸ்க் அணிந்து ஒரு மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்கிறார்கள் என்பதையும் போலீசாரும் சுகாதாரத்துறையினரும் கண்காணித்து வருகின்றனர் இது போன்ற கடும் நடவடிக்கைகளின் மூலம் சென்னையில் சமூக தொற்றாக மாறுவதை  தடுக்கும் பணிகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : teens ,Corona ,outbreak ,regions ,health-police force ,zones ,teenagers ,Department of Health , Corona targeting ,following ,outbreak,all zone, Health Department
× RELATED பார்த்திபன் இயக்கிய டீன்ஸ் படத்துக்கு உலக சாதனை சான்றிதழ்