×

சூரியன் 90 டிகிரியில் செங்குத்தாக வரும் அதிசய நிகழ்வு சென்னையில் நிழல் இல்லாத நாள்: மொட்டை மாடியில் நின்று உருவத்தை தேடிய மக்கள்

சென்னை:  சூரியன் தலைக்கு மேல் நேராக இருக்கும் போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகி விடும். அதாவது நிழல் சரியாக காலுக்கு கீழே இருக்கும். சூரியன் தலைக்கு மேல் சரியாக நாள்தோறும் வருவதில்லை. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வரும். சூரியன் 90 டிகிரியில் செங்குத்தாக வரும் போது ஓரிடத்தில் உள்ள ஒரு பொருள் உடைய  நிழலின் நீளம் ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. அந்த நாளையே நிழல் இல்லாத நாள் அல்லது பூஜ்ய நிழல் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதன்படி, ஏப்ரல் 24ம் தேதி (நேற்று) யும், ஆகஸ்ட் 18ம் தேதியும் இடம்பெறுகிறது.

இதுபோன்ற நிகழ்வு அனைத்து இடங்களிலும் ஒரேநாளில் நிகழாது. அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாட்களில் நிகழும். சூரியன் வட நகர்வு நாட்களில் ஒரு நாளும், தென் நகர்வு நாளில் ஒரு நாளும் என ஆண்டுக்கு இருமுறை இது நிகழும். பொதுவாக மகர ரேகைக்கு 23.45 டிகிரி தெற்காகவும், கடக ரேகைக்கு 23.45 டிகிரி வடக்காகவும் உள்ள நாடுகளில் மட்டுமே இந்த நிகழ்வை காணமுடியும். பகல் 12 மணிக்கு தான் பொருட்களின் நிழல் பூஜ்ஜியமாகும். இந்த நிகழ்வை தெரிந்து கொள்வதன் மூலம் நமது அட்சரேகையை கணக்கிட முடியும். மேலும், சூரியன் உயரத்தையும் கணக்கிடலாம். அந்த வகையில் சென்னையில் நேற்று நிழல் இல்லாத நாளை காண முடிந்தது. இந்த அதிசய நிகழ்வு 12.07 நிமிடத்தில் இருந்து 12.30 மணி வரை நீடித்தது. இதன் மூலம் பூமி சூழலும் வேகம், சுற்றளவு மற்றும் அட்ச ரேகை, தீர்க்க ரேகை ஆகியவை கணக்கிடப்படும்.

கடந்தாண்டு ஏப்ரல் 24ம் தேதி இந்த நிழல் இல்லாத நாள் நிகழ்வு நடந்தது. இதற்காக, சென்னை பிர்லா கோளரங்கத்தில் பொதுமக்கள் பார்வைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அதேபோன்று தனியார் வானிலை ஆய்வு மைய அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களை அழைத்து அவர்களை வெயிலில் வட்டமாக நிற்க வைத்து அந்த நிழல் அவர்கள் பாதங்களில் விழுவதை செயல்முறையில் தெரியப்படுத்துவது வழக்கம். ஆனால், இந்த முறை அவ்வாறு செய்யவில்லை. இந்த நிழல் இல்லாத நாளை பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் வெளியே நின்றபடியும், மொட்டை மாடியில் நின்றும் சோதனை செய்துகொண்டனர்.

Tags : Sun ,Terrace , sun , shade, 90 degrees,people standing ,terrace
× RELATED கத்திரி வெயில் முடிவடைந்த...