×

கொரோனா அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளதால் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு

* சென்னை, கோவை, மதுரையில் நாளை முதல் 4 நாட்கள்
*  சேலம், திருப்பூரில் 3 நாட்கள் அமலாகிறது
*  மளிகை கடைகளுக்கு அனுமதி இல்லை
* தடையை மீறினால் கடும் நடவடிக்கை
* தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளதால் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. சென்னை, மதுரை, கோவையில் நாளை முதல் 29ம் தேதி வரை 4 நாட்களும், சேலம் திருப்பூரில் 3 நாட்களும் அமலில் இருக்கும். முழு ஊரடங்கு நாட்களில் மளிகைக் கடை திறந்திருக்காது. பெட்ரோல் பங்குகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை ெதாடர்ந்து, அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் வெளியில் வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், பொதுமக்கள் இந்த கட்டுப்பாட்டை முறையாக கடைபிடிக்காததன் விளைவாக தமிழகத்தில் ெகாரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. குறிப்பாக, ஊரக பகுதிகளை காட்டிலும் சென்னை போன்ற மாநகர் பகுதிகளில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து கொண்டே வருகிறது.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசால் 19 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் கொரோனாசிகிச்சைகள் குறித்து முதல்வருடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த குழு சமீபத்தில் கூடி கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக முதல்வருக்கு அறிக்கை அளித்தது. அதன்பேரில் மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரையும், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் நெருக்கம் மிகுந்த நகர் பகுதிகளில் நோய்த் தொற்று தொடர்ந்து பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே, தற்போதுள்ள சூழ்நிலைகளையும், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாநகராட்சிகளில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த கீழ்க்கண்ட முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

* சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளிலும், ஊரடங்கு முழுமையாக 26.4.2020 ஞாயிறு காலை 6 மணி முதல் 29.4.2020 புதன் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும்.
*  சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக 26.4.2020 ஞாயிறு காலை 6 மணி முதல் 28.4.2020 செவ்வாய் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும்.

 இந்த ஊரடங்கு காலத்தில்  அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இந்த நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை. இதர அரசு அலுவலகங்கள் (பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட) செயல்படாது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம். பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது. மாநகராட்சிகளை தவிர பிற இடங்களில்/பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள்/அனுமதிகள் தொடரும். மாநகரத்தில் பிற பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். இந்தத் தடையை யாரேனும் மீறினால், அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், தீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய் என்பதால், இதை கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை குழு சென்னை வருகை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழு தற்போது சென்னைக்கு வந்துள்ளது. இத்தகவலை உள்துறை அமைச்சக இணை செயலாளர் புனியா சாலிலா வத்சவா தெரிவித்தார்.

காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டத்தில் சில இடங்களில் முழு ஊரடங்கு
சென்னை மாநகராட்சி பகுதிக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாங்காடு பேரூராட்சி, குன்றத்தூர் பேரூராட்சி மற்றும் சென்னை மாநகராட்சியை ஓட்டியுள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யப்பன் தாங்கல், பரணிபுத்தூர், இரண்டாம்கட்டளை, மவுலிவாக்கம், பெரியணிச்சேரி, நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லச்சேரி, கொழுமணிவாக்கம், சிக்கராபுரம், பூந்தண்டலம், மலையம்பாக்கம், திருமுடிவாக்கம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகள் முழுவதற்கும் முழு ஊரடங்கு பொருந்தும்.

அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த தாம்பரம் மற்றும் பல்லாவரம் வட்டத்தில் உள்ள தாம்பரம் பெருநகராட்சி, பல்லாவரம் பெருநகராட்சி, பம்மல் நகராட்சி, அனகாபுத்தூர் நகராட்சி, செம்பாக்கம் நகராட்சி, பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், சிட்லப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, முடிச்சூர், பெரும்பாக்கம், நன்மங்கலம் ஆகிய 15 கிராம ஊராட்சிகள் மற்றும் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட செங்கல்பட்டு மாவட்ட பகுதிகள் முழுவதிலும் இந்த முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

பத்திரிகைகளுக்கு விலக்கு
கொரோனாவை கட்டுபடுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அந்த நாட்களில் எந்தெந்த அலுவலகம் செயல்படலாம் என்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பத்திரிகைகள் வழக்கம் ேபால் செயல்படலாம், விற்பனை செய்யப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் உத்தரவு அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து மத்திய, மாநில அரசுகள் என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு பத்திரிகைகள் வாயிலாக பல்வேறு அறிவுரை வழங்கி வருகிறது.

இதனை பார்த்து தான் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று வீட்டில் இருந்தபடியே மக்கள் அறிந்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருப்போருக்கு அறிவை வளர்க்கும் களஞ்சியமாக பத்திரிகைகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் பத்திரிக்கைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எந்தெந்த பணிகளுக்கு விலக்கு
*  மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகம், மருந்தகம், பால் விற்பனையகம், ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ பொருட்கள் கொண்டு செல்லும் வாகனம், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்திக்கு விலக்கு.
* தலைமை செயலகம், சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, மின்சாரம், ஆவின், உள்ளாட்சி அமைப்பு, குடிநீர் விநியோக பணியில் ஈடுபடும் ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபடலாம்.
*  மத்திய அரசின் வங்கிகள் 33 சதவீதம் பணியாளர்களை கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி இயங்கலாம்.
* பெட்ரோல் பங்குகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இயங்கலாம் (ஏற்கனவே பெட்ரோல் பங்குகள் காலை 8 மணி முதல் 1 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது)
*  அம்மா உணவகம், ஏடிஎம் மையங்கள் வழக்கம் போல் செயல்படும்.
*  உணவகங்களில் தொலைபேசியில் தொடர்பு மூலம் வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்ய அனுமதி. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கும் இயங்க அனுமதி.
*  சமையல் எரிவாயு விற்பனை நிலையங்கள் மற்றும் ரேஷன் கடைகள் மற்றும் அதன் குடோன்கள் செயல்படலாம்.
*  கோயம்பேடு மார்க்கெட்டுகள் கட்டுபாடுகள் உடன் இயங்க அனுமதி. நடமாடும் காய்கறி மற்றும் பழக்கடைகளுக்கு அனுமதி. இந்த நாட்களில் மற்ற கடைகளுக்கு இயங்க அனுமதி கிடையாது.

Tags : municipalities , Full curfew,5 municipalities, corona , more widespread
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு