×

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்ல குழந்தையை தூக்கிக்கொண்டு 22 கி.மீ. தூரம் நடந்து சென்ற பெண்

விழுப்புரம்: புதுச்சேரி மருத்துவமனையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்ல குழந்தையை தூக்கிக்கொண்டு பெண் ஒருவர் 22 கி.மீ. தூரம் நடந்தே சென்றுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூரை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி தீபா (22). இவர்களுடைய மகள் ஜஸ்மிதா(1) கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தாள். அப்போது திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்ததில் ஜஸ்மிதா காயமடைந்தாள். உடனே குழந்தையை சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்திருந்தனர். இந்நிலையில் ஜஸ்மிதா நேற்று குணமடைந்ததை தொடர்ந்து அங்குள்ள டாக்டர்கள், குழந்தையை வீட்டிற்கு அழைத்துச்செல்லலாம் என்று கூறினர். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் வாகன போக்குவரத்து வசதியில்லாததால் செய்வதறியாது தவித்தார்.

குழந்தையுடன் நடந்து வந்த பெண்பின்னர் புதுச்சேரியில் இருந்து நடந்தாவது வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்று முடிவு செய்த தீபா தனது குழந்தையை தூக்கிக்கொண்டு புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி நடந்தார். 22 கி.மீ. தொலைவில் உள்ள மதகடிப்பட்டில் குழந்தையுடன் தீபா நடந்து வருவதை பார்த்த ஒருவர், அவர்கள் இருவரையும் தனது காரில் ஏற்றிக்கொண்டு விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் இறக்கி விட்டுள்ளார். பின்னர் விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு நடந்தே செல்வது என முடிவெடுத்த தீபா, தனது குழந்தையுடன் புறப்பட்டார். விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட நுழைவுவாயில் அருகில் வந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தீபாவிடம் விசாரித்தனர். தொடர்ந்து, அங்கிருந்த போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தாங்கள் வைத்திருந்த பணத்தை சேகரித்து வாடகை கார் ஒன்றை ஏற்பாடு செய்தனர்.

அந்த கார் டிரைவர், தனது காருக்கு டீசல் மட்டும் போட்டால்போதும், வாடகை தர தேவையில்லை என்றார். இதையடுத்து தீபா, தனது குழந்தையுடன் கள்ளக்குறிச்சி தச்சூருக்கு காரில் சென்றார். போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் கார் டிரைவரின் இந்த செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.

Tags : infant ,hospital ,Kalpukurichi ,Kalpukurichi Hospital , Jibmer Hospital, Puducherry. Kallakurichi, woman
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...