×

மணவாளக்குறிச்சியில் கூண்டில் சிக்காத மர்ம விலங்கு: விடிய விடிய காத்திருந்த வனத்துறையினர்

குளச்சல்: மணவாளக்குறிச்சி அருகே, கூண்டில் மர்ம விலங்கு சிக்காததால் விடிய விடிய காத்திருந்த வனத்துறையினர் ஏமாற்றமடைந்தனர். மணவாளக்குறிச்சி அருகே பிள்ளையார்கோவிலை சேர்ந்தவர் சிலுவைமுத்து (63). கொத்தனார். இவர் வளர்ந்து வந்த 2 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியது. இது குறித்து அவர் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  வேளிமலை, பூதப்பாண்டி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று  தரையில் பதிந்த கால் தடயங்களையும் ஆய்வு செய்தனர். அது எந்த விலங்கின் கால் தடயம் என்பது உடனடியாக தெரியவில்லை. இதேபோல் ஆண்டார் விளையில் ஒரு வீட்டில் சுமார் 9 கிலோ எடை உள்ள வான் கோழியையும் மர்ம விலங்கு பிடித்து சென்றது. கடந்த 20ம் தேதி இரவு தருவை நேசமணி என்பவரது வீட்டில் கட்டி போட்டிருந்த ஆடு சத்தம் போட்டது. வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது மர்ம விலங்கு ஒன்று தப்பி ஓடியது.

இதேபோல் இருதினங்களுக்கு முன் இரவு ஐ.ஆர்.இ.சாலையில் மர்ம விலங்கு ஒன்று முயல், பழ உண்ணியை விரட்டி சென்றதை அந்த பகுதி மக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் கூறினர். அந்த விலங்கு சிறுத்தை வடிவில் இருந்ததாக பொது மக்கள் கூறினர். இதையடுத்து வனத்துறைக்கு உடனே தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து இரவோடு இரவாக அந்த பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. 2 இடங்களில் 4 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை நேற்றுமுன்தினம் மாலை வேளிமலை ரேஞ்சர்கள் மணிமாறன், புஷ்பராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். விலங்கை பிடிப்பதற்காக வனத்துறையினர் ஒரு கூண்டில் ஒரு ஆட்டை அடைத்து விடிய விடிய தோப்புக்குள் காத்திருந்தனர். தொடர்ந்து ஆடுகளை பிடிக்க வரும் மர்ம விலங்கு குறித்து அறிந்து கொள்ள பொது மக்களும் விடியவிடிய கண்விழித்து காத்திருந்தனர்.

ஆனால் இரவு எந்த விலங்கும் வரவில்லை. இதனால் வனத்துறையினர், பொது மக்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து நேற்று காலை சுமார் 6 மணியளவில் வனத்துறையினர் திரும்பி சென்றனர். இருப்பினும் மீண்டும் இரவு விலங்கை பிடிக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக வனத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்தன.

Tags : Manavalakurichi ,Forest officials , Manavalakurichi, Mystery Animal, Forest Department
× RELATED குமரி அருகே பாலத்தின் பக்கவாட்டு...