×

கொரோனா ஊரடங்கால் கண்ணீர் வடிக்கும் தென்னை விவசாயிகள்: தேங்காய்களை விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை

வருசநாடு: கடமலை மயிலை ஒன்றியத்தில் 144 தடை உத்தரவால் தென்னை விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் தேங்காய்கள் அழுகி வருகின்றன. தேனி மாவட்டம், கடமலை மயிலை ஒன்றியத்தில் தென்னை விவசாயம் அதிகளவில் நடந்து வருகிறது. தற்போது தென்னை மரங்களில் காய்கள் பறிக்கும் பணி நடக்கிறது. இங்கிருந்து தினமும் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் தேங்காய்கள் திருப்பூர், மதுரை, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். தற்போது கொரோனா 144 தடை உத்தரவால் தென்னை விவசாய பணிகள் முடங்கியுள்ளன. வியாபாரிகள் தேங்காய் வாங்குவதற்கு வரவில்லை. இதனால் 10 லட்சம் தேங்காய்கள் தேங்கியுள்ளது. கூலித் தொழிலாளிகள் தென்னை மரங்களில் ஏறுவதற்கு முன்வரவில்லை. இதனால் தென்னை விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி மணிபாரதி கூறுகையில், ‘‘கடந்த சில தினங்களாக தேங்காய்கள் தென்னை மரங்களில் பறிக்கப்படாமல் உள்ளது. ஒவ்வொரு விவசாயியும் மிகவும் பாதிப்படைந்து வருகிறோம். கடமலை மயிலை ஒன்றியத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். எனவே தென்னை விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார். விவசாயி ரவி கூறுகையில், ‘‘தினமும் சாப்பிடுவதற்கு கூட மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். தென்னை விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். வியாபாரிகள் தேங்காய் வாங்குவதற்கு முன்வருவதில்லை. இதனால் தேங்காய்கள் அழுகி வருகின்றன. தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தென்னை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Corona , Corona, coconut growers
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...