×

ஆனந்தமாக கிரிக்கெட் விளையாடிய வாலிபர்கள் கேமராவை கண்டு சந்து பொந்தில் நுழைந்து தப்பியோடியதால் பரபரப்பு: வேலூரில் ட்ரோன் படுத்தும் பாடு

வேலூர்: வேலூர் பாலாற்றங்கரையில் ஊரடங்கு மீறி கிரிக்கெட் விளையாடிய வாலிபர்கள் போலீசார் பறக்க விட்டு கண்காணித்த ட்ரோன் கேமராவை கண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடுமுழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதேபோல் வேலூர் மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே சுற்றிவருகின்றனர். அதேபோல் வாலிபர்களும் ஆங்காங்கே கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க முடிகிறது. இதனை தடுக்க எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் பாலாற்றங்கரையில் நேற்று 20க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். போலீசார் பாலாற்று மேம்பாலத்தின் மீது நின்று ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு கண்காணித்தனர். ட்ரோன் கேமராவை பார்த்ததும் அங்கிருந்த வாலிபர்கள், பனியன் மூலம் முடியும் கிரிக்கெட் பேட், அங்கிருந்த இரும்பு பைப்களில் தங்களது முகத்தை மறைத்தனர். தங்களை கேமரா கடந்து சென்றதும் அங்கிருந்த சந்து பொந்துக்களில் மறைந்து தலைதெறிக்க ஓடினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில், தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

அதேபோல் பாலாற்றங்கரை, மைதானங்கள், தெருக்களில் நோய் பரவும் வகையில் ஒன்று கூடி விளையாடினாலும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.


Tags : cricket cricketers ,cricketers , Cricket, youth, Vellore, drone
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு போட்டி