×

மதுரை சித்திரை திருவிழாவின் துவக்க நிகழ்வான ‘கொட்டகை முகூர்த்தம்’ விழா ரத்து

* ஊரடங்கு அமலால் முடிவு
* பக்தர்கள் ஏமாற்றம்

அலங்காநல்லூர்: கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மதுரை சித்திரைத் திருவிழாவின் துவக்க நிகழ்வான கொட்டகை முகூர்த்தம் நேற்று நடத்தப்படவில்லை. மதுரையில் நடக்கும் கோயில் விழாக்களில் கிரீடம் மாட்டிக்கொள்ளும் மகத்தான விழா சித்திரைப் பெருவிழாவாகும். மீனாட்சி கோயிலில் நடந்த மாசித் திருவிழாவுடன், அழகர்கோவில் சித்திரை விழாவையும் சேர்த்து மன்னர் திருமலை நாயக்கர் மாற்றம் செய்தார். இதன்படி புறநகர் தேனூருக்கு பதில், வைகையாற்றில் அழகர் இறங்கி வருகிறார். சைவ, வைணவ ஒற்றுமைக்கான விழாவாக மாற்றம் கண்ட இந்த சித்திரைத் திருவிழா, கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக இந்த ஆண்டு மீனாட்சி கோயிலில் நிறுத்தப்பட்டுள்ளது. மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மட்டுமே, தகுந்த சமூக இடைவெளியுடன் 4 பட்டர்களை மட்டும் கொண்டு நடத்தப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தகுந்த கட்டுப்பாடுகளுடன் அழகர் விழாவின் குறிப்பிட்ட நிகழ்வுகளை நடத்திக்கொள்ள, அழகர்கோயில் நிர்வாகமும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற சித்திரை பெருந்திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கொட்டகை முகூர்த்த விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த விழாவைத் தொடர்ந்தே, அழகர்கோயிலுக்கான பிற விழா பணிகள் துவங்கும். இதன்படி அழகர்கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தல்லாகுளம் பெருமாள் கோயிலில் திருவிழாவிற்கு கொட்டகை போடுவதற்கான, முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மேலும், அழகர் உலாவரும் சப்பரத்தில் பொருத்தக்கூடிய ‘யாழி முகத்திற்கு’ சிறப்பு அபிஷேகமும் நடத்ப்படும். ஆனால், நேற்று காலை இவ்விழா நடத்தப்படவில்லை. இது பக்தர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது.

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, ‘‘மீனாட்சி கோயில், அழகர்கோயில் திருவிழாக்களில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் முக்கிய நிகழ்வுகளை அரசு நடத்த முன்வர வேண்டும். ஆகம விதிகள் பாதிக்காதவகையில், பக்தர்களுக்கும் நிறைவு தரும் விதமாக, அதேநேரம் கொரோனா பாதிப்பிற்கு வழி வகுத்து விடாமலும் அரசு நடவடிக்கை வேண்டும்’’ என்றனர். மே 3ம் தேதி வரை ஊரடங்கு இருப்பதால், மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதற்கான வேலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. வழக்கமாக அழகர்கோயிலில் மே 3ல் விழா துவங்கி, மே 5ம் தேதி அழகர் மதுரைக்கு புறப்படுவார். 6ம் தேதி எதிர்சேவை நடைபெறும். 7ம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், 8ம்தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம், 9ம் தேதி தாசாவதார நிகழ்ச்சி, 10ம் தேதி பூப்பல்லக்கு, 11ம் தேதி மலைக்கு திரும்புவது போன்ற நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போதைய சூழ்நிலையில், இந்த நிகழ்ச்சிகள் நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், அழகர் வந்து திரும்பும்போது தங்கிச் செல்லும், 427 மண்டகபடிகளிலும், இதன் நிர்வாகிகள் தங்களது பணியை தொடங்கவில்லை. கோயில் நிர்வாக அதிகாரி அனிதா கூறும்போது, ‘‘பிரசித்தி பெற்ற அழகர்கோயில் திருவிழா நடைபெற வேண்டும் என லட்சக்கணக்கான பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழக அரசுக்கும் உரிய அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம். கட்டுப்பாடுகளுடன் அனுமதித்தால், திருவிழாவை எப்படி நடத்தலாம் என்பது குறித்தும் கோயில் பட்டர்களுடனும், அதிகாரிகளிடமும் ஆலோசிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Madurai Cinema Festival ,festival inauguration ,Kodagai Mukurtham , Madurai Tamil Festival, Kodagu Mookurum, Festival canceled
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்