×

ஒரு பக்கம் மீன்பிடி தடைக்காலம்; மறுபக்கம் கொரோனா ஊரடங்கு: இரட்டிப்பாகுமா நிவாரண நிதி?

* மீனவர் குடும்பங்கள் பரிதவிப்பு
* தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

ராமேஸ்வரம்: மீன்பிடி தடைக்காலம், கொரோனா ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட காரணங்களால் தொழிலுக்கு செல்லாததால், தடைக்கால நிவாரண நிதியை இரட்டிப்பாக்கி வழங்கிட வேண்டும் என தமிழக மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 15ம் தேதி மீன்பிடி தடைகாலம் துவங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அன்றுமுதல், தமிழக கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் படகுகள் அனைத்தும் 20 நாட்கள் கரைநிறுத்தம் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஏப். 14 முதல் ஜூன் 15 வரை 61 நாள் மீன்பிடி தடைகாலம் துவங்கியதால் மொத்தமாக 81 நாட்கள் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் வெளிநாடு ஏற்றுமதி மற்றும் உள்ளூர் விற்பனை என பல ஆயிரம் கோடி ரூபாய் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் என்றால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் மீனவர்கள், மீன்பிடி தொழில்சார்ந்த தொழிலாளர்கள் என 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அன்றாட வருவாய் இழந்துள்ளனர். ஆண்டுதோறும் மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு தடைகால நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு தடை நாட்களையும் சேர்த்து 81 நாட்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தடைக்கால நிவாரண தொகையை இரட்டிப்பாக்கி வழங்கிட வேண்டும் என மீனவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.


தினம் ரூ.2.5 கோடி வர்த்தகம் பாதிப்பு
மார்ச் 24 முதல் கொரோனா ஊரடங்கு தடை, ஏப். 14 முதல் ஜூன் 15 வரை மீன்பிடி தடைகாலம் என தொடர்ச்சியாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 81 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் நாள் ஒன்றுக்கு ரூ.2.5 கோடி வீதம் ரூ.100 கோடிக்கு மேல் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்படகில் பிடித்து வரப்படும் மீன்கள் உள்ளூரில் விற்பனை செய்யப்பட்டாலும் மீன்களின் விலை வழக்கத்தை விட கிலோவிற்கு  ரூ.100 முதல் ரூ.200 வரை அதிகரித்துள்ளது.



Tags : Corona , Fishing ban, Corona curfew, relief fund
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...