×

கொரோனா நோயாளிகள் உயிரை காக்க பிளாஸ்மா தானம் செய்ய குணமடைந்தோர் தயக்கம்: நிபுணர்கள் வேதனை

மும்பை: கொரோனா வில் குணமடைந்தவர்கள் பிளாஸ்மாதானம் செய்ய தயங்குவதாக நிபுணர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட நோயாளிகளின் உயிரை காப்பாற்ற பிளாஸ்மா தெரபி சிகிச்சையை உலகின் பல நாடுகள் செய்து வருகின்றன. இதற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. இந்த சிகிச்சை முறையை பரிசோதனை அடிப்படையில் மேற்கொள்ள இந்திய மருத்துவ கவுன்சிலும் அனுமதி தந்துள்ளது. ஆனால், அந்த சிகிச்சைக்கு முக்கிய தேவையே, கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் ரத்தம் தான். பிளாஸ்மா தெரபி என்பது நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களிடமிருந்து ரத்தம் எடுத்து, ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு செலுத்தி செய்யப்படும் சிகிச்சை முறையாகும். தொற்றில் இருந்து மீண்டவர்களிடம் உள்ள வைரஸ் எதிர்ப்புப் புரதம், பாதிப்பு உள்ளவர்களின் உடலில் வைரசை எதிர்த்துப் போராடும். இதன்மூலம், அவர்கள் அந்தத் தொற்றிலிருந்து மீள முடியும்.

ஆனால், குணமடைந்தவர்கள் ரத்த தானம் செய்ய தயங்குவதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறையின் மூத்த தொற்றுநோயியல் நிபுணர் வருத்தத்துடன் கூறுகிறார். அவர் அளித்த பேட்டியில், ‘‘பிளாஸ்மா சிகிச்சையுடன் வழக்கமான மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளும் போது, நோயாளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதன் மூலம் அவர் குணமடைவார். ஆனால், நோயிலிருந்து குணமடைந்தவர்கள் ரத்த தானம் செய்ய தயக்கம் காட்டுகின்றனர். மும்பையில் சுமார் 500 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். அவர்களில் வெறும் 2 பேர் மட்டுமே ரத்ததானம் செய்ய முன்வந்துள்ளனர். மற்றவர்களுக்கு உதவ முன்வாருங்கள் என அவர்களை நாங்கள் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. மேலும் குணமடைந்து வீடு திரும்புபவர்கள் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

இதுவும் பிளாஸ்மா தானம் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது,’’ என்றார். சிகிச்சை முறை குறித்து அவர் கூறுகையில், ‘‘பிளாஸ்மா சிகிச்சை எளிதானது அல்ல. அது நடைமுறைப்படுத்துவது பெரும் சிக்கலானது. குணமடைந்தவர்களின் ரத்தத்தில் போதிய நோய் எதிர்ப்பு அணுக்கள் இருக்க வேண்டியதும் அவசியம். எனவே பரிசோதனையும் முக்கியமானது,’’ என்றார். எனவே, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள், மற்ற நோயாளிகளின் உயிரை காக்கும் பொருட்டு, பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். ரத்ததானம் செய்வதால் அவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறுகின்றனர்.

Tags : Coroners ,Experts , Corona patients, plasma, donors, specialists
× RELATED 25 தனியார் துறை நிபுணர்களுக்கு ஒன்றிய அரசு பணி