×

கொரோனாவை தடுப்பதற்கு பதிலாக மதவாத வைரசை பரப்புகிறது பாஜ: காங்கிரஸ் தலைவர் சோனியா கடும் தாக்கு

புதுடெல்லி: ‘‘கொரோனா வைரசை தடுப்பதற்கு பதிலாக, நாட்டு மக்களிடையே மதவாத வைரசை பாஜ கட்சி பரப்பிக் கொண்டிருக்கிறது. இதனால், சமூக நல்லிணக்கம் சிதைந்து வருகிறது,’’ என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 3 வாரத்தில் 2வது முறையாக காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட காரிய கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடந்த இக்கூட்டத்திற்கு கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமை வகித்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது: நான் இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கும் தகவல் ஒவ்வொரு இந்தியரும் கவலைப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. கொரோனா தொற்றை நாம் ஒன்றிணைந்து போராட வேண்டிய இந்த சூழலிலும் கூட, பாஜ அரசு, தொடர்ந்து வெறுப்புணர்வு மற்றும் மத பாகுபாடு எனும் வைரசை பரப்பி வருகிறது. இதனால், சமூக ஒற்றுமையை மத்திய அரசு சிதைத்து வருகிறது. அந்த சேதத்தை சீராக்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கடுமையாகப் போராடி வருகிறது.கடந்த 3 வாரங்களில் கொரோனா வைரசின் பரவல் தீவிரமடைந்துள்ளது. மத்திய அரசு பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாது.

ஊரடங்கு கொண்டு வரப்பட்டதில் இருந்து பல்வேறு ஆலோசனைகளையும், ஆக்கப்பூர்வான கூட்டு ஒத்துழைப்பு குறித்தும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன். துரதிருஷ்டவசமாக அதில் ஒரு சிலவற்றை மட்டுமே ஏற்ற அரசு, மோசமான வழியிலேயே பயணிக்கிறது. இரக்கம், பெருந்தன்மை, விழிப்புடன் இருத்தல் என எதுவுமே மத்திய அரசிடமிருந்து வெளிப்படவில்லை.பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். ஆனாலும் கூட அதன் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. சோதனை கிட்களிலும் பற்றாக்குறை உள்ளது. 40 நாள் ஊரடங்கு காரணமாக வர்த்தகம், தொழில்துறை முடங்கி உள்ளது. 12 கோடி மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமலும், உணவு கிடைக்காமலும் அவதிப்படுகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில், மே 3ம் தேதிக்குப் பிறகான நிலைமையை மத்திய அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்ற ஒரு தெளிவான திட்டமே இல்லாமல் இருக்கிறது. இதனால், அடுத்த ஊரடங்குக்குப் பிறகான நிலை இன்னும் மோசமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ‘‘வைரஸ் தொற்றை எதிர்த்து போராடும் இந்தியாவின் திறனை வைத்துதான் ஊரடங்கின் வெற்றி நிர்ணயிக்கப்படும். இதில் வெற்றி பெற மத்திய, மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பு அவசியம்,’’ என்றார்.

காங். முதல்வர்கள் குற்றச்சாட்டு
கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் ஆளும் முதல்வர்கள், மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என குற்றம்சாட்டினர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், ‘‘வைரஸ் தடுப்பு பணிக்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்காவிட்டால், கோவிட்-19க்கு எதிரான போராட்டம் பலவீனமடையும்,’’ என்றார். இதே கருத்தை சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலும் வலியுறுத்தினார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசுகையில், ‘‘மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் எப்படி மாநில அரசுகளால் சமாளிக்க முடியும். நாங்கள் ஒன்றும் எதிரியல்ல. எனவே, மத்திய அரசு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7,500 நிதி உதவி வேண்டும்

காரிய கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* கோவிட்-19 சவால்களுக்கு தீர்வு காண மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
* இந்த வைரஸ் சாதி, மதம், இனம் பார்ப்பதில்லை. அதே போல, நாமும் இந்த நெருக்கடியான காலத்தில் வகுப்புவாத பிளவுகளை தூண்டும் சக்திகளிடம் எச்சரிக்கையாக இருந்து ஒரே தேசமாக எதிர்த்து போராட வேண்டியது நமது பொறுப்பாகும்.
* விவசாய மற்றும் பிற கடன்களை செலுத்த ஓராண்டுக்கான வட்டி இல்லா கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
* பரிசோதனை, தடமறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை ஆகியவையே கொரோனாவை கட்டுப்படுத்துதலில் முக்கிய நடவடிக்கைகளாகும்.
* மே 3ம் தேதிக்குப் பிறகான நிலைமையை மத்திய அரசு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது, ஊரடங்கிற்கு பிறகான மாற்று நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து இப்போது மீதமிருக்கும் நாட்களிலாவது மத்திய அரசு விரிவான அறிக்கை தயாரித்து வெளியிட வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் மத்திய அரசு 7,500 நிதி உதவி வழங்க வேண்டுமென்றும் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

Tags : Sonia ,Congress ,Corona ,BJP , Sonia Gandhi, BJP and Congress president
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள்...