×

சூப்பர் மார்க்கெட், ஜவுளிக்கடைக்கு சீல்: வருவாய் துறையினர் அதிரடி

மாமல்லபுரம்: கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க, அனைத்து கடைகளும் மதியம் 1 மணிவரை மட்டுமே திறந்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மாமல்லபுரம் நகரத்தில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் சேராமல் இருக்க போலீசார், வருவாய் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் அமைந்துள்ள செல்போன் கடை மற்றும் கோவளம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஜவுளிக்கடைகள் ஆகியவை திறந்து இருந்தன. அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமல், கூட்டமாக வந்து செல்வதாக, திருக்கழுக்குன்றம் தாசில்தார் தங்கராஜிக்கு, சமூக ஆர்வலர்கள் தகவல் கொடுத்தனர்.

அவரது உத்தரவின்படி மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ் தலைமையில், வருவாய் அலுவலர்கள் மாமல்லபுரத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, விதிமுறைகளை மீறி செல்போன் கடை மற்றும் ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. இதையடுத்து வருவாய் துறையினர் அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி பகுதியில் அரசின் உத்தரவை மீறி திறக்கப்பட்டு இருந்த 2 ஆயில் மில்கள், ஹார்டுவேர்ஸ் மற்றும் எலக்ட்ரிகல் கடைகளுக்கும் சீல் வைத்தனர். அப்போது திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் முனிசேகர், துணை தாசில்தார் கார்த்திக் ரகுநாத், விஏஓ சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல், பெரும்புதூர் பேரூராட்சி காந்தி சாலையில் தனியார் சூப்பர் மார்கெட் உள்ளது. இங்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. மேலும் மக்களுக்கு கையை சுத்தம் செய்ய சானிடைசரும் வைக்கவில்லை என பெரும்புதூர் ஆர்டிஓ திவ்யக்கு தகவல் புகார் வந்தது. இதனையடுத்து ஆர்டிஓ தியவ, பெரும்புதூர் ஏஎஸ்பி கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் நேற்று சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, பொதுமக்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என தெரிந்தது. மேலும் மக்கள் பயன்பாட்டுக்கு சானிடைசரும் இல்லை. இதையடுத்து அதிகாரிகள், சூப்பர் மார்க்கெட்டுக்கு சீல் வைத்தனர்.



Tags : Supermarket , Supermarket, Juice Shop, Seal, Revenue Department
× RELATED இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரம்:...