×

தமிழகஅரசு அனுமதியோடு டாக்டர் சைமன் உடலை கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய தயார்

சென்னை-மயிலை மறைமாவட்ட பேராயர் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் அனுமதியோடு, மறைந்த டாக்டர் சைமன் உடலை கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ  கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்ய முழு ஒத்துழைப்பு  நல்குவோம் என்று சென்னை-மயிலை மறைமாவட்ட பேராயர் அந்தோணிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து நேற்று  அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: டாக்டர் சைமன் ஹெர்குலஸ் அடக்கத்தின்போது நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சில நாட்களாக, சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற செய்திகள் வெளிவருவது வருத்தம் அளிக்கிறது.டாக்டர் சைமன் மரணம் அடைந்தார் என்ற செய்தி கிடைத்தவுடன் அவரது குடும்ப உறவினர் சுஷில் ஆதாம் 19ம் தேதி இரவு 8.30 மணிக்கு, கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ கல்லறையில் 20ம் தேதி அடக்கம் செய்வதற்கு வேண்டிய அனுமதி கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

தொற்று நோயால் இறந்ததன் காரணமாக அவரது உடலை, அன்று இரவே அடக்கம் செய்ய மாநகராட்சி அறிவுறுத்தியதால், கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ கல்லறையில் அடக்கம் செய்வதை தவிர்த்து, கீழ்ப்பாக்கத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.  இதை அறிந்த அப்பகுதி மக்கள், இறந்தவரின் உடலை அங்கு அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சென்னை மாநகராட்சி நிர்வாகம் இறுதி முடிவு மேற்கொண்டு, புதிய ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு இடுகாட்டில் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்து, மருத்துவமனையில் இருந்து உடலை அனுப்பி வைத்தது. அதன்பிறகு நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் வேலங்காடு பகுதியில் நடந்தவை. கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறை தோட்டங்களுக்கு அருகில் நடந்தவை அல்ல.

இரு கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறுகளால் இறந்தவரின் உடல் உரிய முறையில் அடக்கம் செய்யப்படவில்லை என்பதால்தான் வன்முறை நிகழ்ந்தது என ஆதாரமற்ற செய்திகள் பரப்பப்படுவது கண்டனத்துக்குரியது. இந்த சமயத்தில் மறைந்த டாக்டர் சைமன் துணைவியார் ஆனந்தி, தமிழக முதல்வருக்கு முன்வைத்துள்ள வேண்டுகோளை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். தமிழக அரசின் அனுமதியோடு, டாக்டர் சைமன் உடலை கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் உரிய முறையில் நல்லடக்கம் செய்ய முழு ஒத்துழைப்பு நல்குவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Simon ,Government of Tamil Nadu ,Kebithigollewa ,Christian Cemetery ,Nadu ,The Christian Cemetery , The Government of Tamilnadu, Dr. Simon, Body, Obedience
× RELATED அயர்லாந்து பிரதமராகிறார் சைமன் ஹாரிஸ்