×

ரஜினிகாந்துக்கு சவால்விட்ட சிரஞ்சீவி

சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் திரையுலக நடிகர், நடிகைகள் தங்கள் சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக் உருவாக்கி, ஒருவருக்கு ஒருவர் சவால் விடுத்து வருகின்றனர். பி த ரியல் மேன் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலிக்கு வேண்டுகோள் விடுத்தார். மனைவிக்கு உறுதுணையாக வீட்டு வேலைகள் பார்த்து, அதை வீடியோவாக வெளியிட வேண்டும் என்று. இந்த சவாலை ஏற்று வீட்டு வேலைகள் செய்த வீடியோவை வெளியிட்ட ராஜமவுலி, பிறகு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு சவால் விட்டார். பிறகு ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவிக்கு சவால் விடுத்தார்.

சவாலை ஏற்று வீட்டு வேலைகள் செய்வது, அம்மாவுக்கு தோசை ஊற்றிக் கொடுப்பது என்று, சிரஞ்சீவி வீடியோ எடுத்து டிவிட்டரில் வெளியிட்டார். தொடர்ந்து இந்த சவாலை தனது நண்பர்களான அமைச்சர் கே.டி.ராமாராவ், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு விடுத்துள்ளார். இதுகுறித்து சிரஞ்சீவி கூறியிருப்பதாவது: இதுதான் நிஜ சவால். இதுதான் இன்று நான் செய்வது. இப்போது இந்த வீடியோதான் உங்களுக்கான ஆதாரம். கே.டி.ராமாராவ் மற்றும் என் நண்பர் ரஜினிகாந்த் ஆகியோரை நான்  இந்த சவாலை பரிந்துரைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ள நிலையில், ரஜினிகாந்த் இந்த சவாலை ஏற்றுக்கொள்வாரா என்று தெரியவில்லை. சினிமா ஆர்வம் காரணமாக பிலிம் இன்ஸ்டிடியூட் படிப்பை முடித்த இருவரும் ஆரம்பகாலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். ரஜினிகாந்த் நடித்த மாப்பிள்ளை, ராணுவ வீரன் ஆகிய தமிழ் படங்களில் சிரஞ்சீவி நடித்துள்ளார்.


Tags : Chiranjeevi ,Rajinikanth , Chiranjeevi , Rajinikanth
× RELATED ஏழுமலையான் கோயிலில் நடிகர் ராம்சரண் தரிசனம்