×

செய்யும் தொழிலே தெய்வம் தாயை அடக்கம் செய்த 30 நிமிடத்தில் பணிக்கு திரும்பிய துப்புரவு பணியாளர்: பெரம்பலூர் மக்கள் நெகிழ்ச்சி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் எழுத்தராக பணிபுரியும் போலீஸ் ஏட்டு ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, அந்த போலீஸ் நிலையத்தில் தினமும் 5 முறை கிருமி நாசினி தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வி.களத்தூர் வண்ணாரம்பூண்டி, காமராஜர் நகரில் வசிக்கும் துப்புரவு பணியாளர் அய்யாதுரை (45) போலீஸ் நிலையத்திற்குள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது தாய் அங்கம்மாள் (75) ஏற்கனவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 21ம் தேதி மதியம் 2 மணிக்கு இறந்தார்.

அன்று காலையில் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி ெதளிக்கும் பணிக்கு வந்த அய்யாதுரை, தாய் இறந்த தகவல் கிடைத்ததும் அங்கிருந்து 2.30 மணிக்கு வீட்டுக்கு சென்றார். ஊரடங்கு கெடுபிடிகளை கருத்தில் கொண்டு 20க்கும் குறைவான உறவினர்களை கொண்டு தாயின் உடலை மாலை 6 மணிக்குள் அடக்கம் செய்தார். இதை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற அய்யாதுரை, தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லி விட்டு மாலை 6.30 மணிக்கு மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு கிருமி நாசினி தெளிக்கும் பணிக்கு திரும்பி விட்டார். இதுகுறித்து அய்யாதுரை கூறுகையில், “கொரோனா வைரஸ் நோயில் எனது கிராம மக்கள் பாதிக்கப்படாமல் காப்பாற்ற வேண்டியது எனது கடமை. எனவேதான் எனது தாயின் இறுதிச்சடங்கு முடிந்தவுடன் மீண்டும் பணிக்கு திரும்பினேன்” என்று தெரிவித்தார். இது போலீசாரை மட்டுமல்ல அப்பகுதியினர் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Tags : burial ,goddess ,cleaning worker ,Perambalur Back , Back , work 30 minutes, burial,goddess
× RELATED திருமலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...