×

ஒலிம்பிக் கமிட்டி ஊழியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

டோக்கியோ: தள்ளி வைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான அட்டவணைகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒலிம்பிக் கமிட்டி ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பீதி காரணமாக உலகம் முழுவதும் முடங்கிக் கிடக்கின்றது. அதிலும் கடந்த ஒன்றரை மாதங்களாக விளையாட்டு போட்டிகள் ஏதும் நடக்கவில்லை. நடந்து கொண்டிருந்த பல போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன, கைவிடப்பட்டுள்ளன. ஆனால் ஜப்பானில் ஜூலை 24ம் தேதி தொடங்க இருந்த கோடைகால ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில், டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி திரும்பத் திரும்ப சொல்லி வந்தன. அதற்கு ஆஸ்திரேலியா, கனடா உட்பட பல்வேறு நாடுகளின் ஒலிம்பிக் சங்கங்கள் கொரோனா பீதிக்கு இடையில் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்தன.

கூடவே கொரோனா பாதிப்புக்கு ஜப்பானும் தப்பவில்லை. எனவே  ஜப்பான் வேறு வழியின்றி ஒலிம்பிக் போட்டியை 2021 ஜூலை மாதத்துக்கு தள்ளி வைத்தது. அதனால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான அட்டவணைகள் தயாரிக்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. அங்கு ஊரடங்கு நிலவுவதால் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி ஊழியர்கள் 3800 பேர் வீட்டிலிருந்தபடியே வேலை செய்கின்றனர். அவற்றை ஒருங்கிணைக்கும் பணியை ஒலிம்பிக் கமிட்டி தலைமை அலுவலகத்தில் இருந்து சிலர் மேற்கொண்டுள்ளனர்.

அவர்களில் 30வயது ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் முன்பு தீவிரமாக இருந்த ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகிகளுக்கு இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் நேற்று முன்தினம் வரை சுமார் 12000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 276 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Olympic Committee , Olympic Committee employee, corona virus
× RELATED இந்திய பாரா ஒலிம்பிக் சம்மேளனத்தின்...