×

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு குழந்தையுடன் 22 கி.மீ. நடந்தே சென்ற பெண்

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூரை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி தீபா (22). இவர்களது மகள் ஜஸ்மிதா(1), கடந்த மார்ச் 2ம் தேதி வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கியவள் திடீரென கீழே விழுந்து காயமடைந்தாள். உடனே குழந்தையை சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். இந்நிலையில் ஜஸ்மிதா நேற்று குணமடைந்ததை தொடர்ந்து டாக்டர்கள், குழந்தையை வீட்டிற்கு அழைத்துச்செல்லலாம் என்று கூறினர். ஆனால் கொரோனா தடுப்புக்கான ஊரடங்கு உத்தரவால் வாகன வசதியில்லாததால் செய்வதறியாது தவித்தார்.  நடந்தாவது வீட்டிற்கு செல்வோம் என்று முடிவு செய்த தீபா, குழந்தையை தூக்கிக்கொண்டு புதுச்சேரியில இருந்து விழுப்புரம் நோக்கி நடந்தார். 22 கி.மீ. தொலைவில் உள்ள மதகடிப்பட்டில் குழந்தையுடன் தீபா நடந்து வருவதை பார்த்த ஒருவர், அவர்கள் இருவரையும் தனது காரில் ஏற்றி விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் இறக்கி விட்டுள்ளார். அங்கிருந்து கள்ளக்குறிச்சிக்கு மீண்டும் குழந்தையுடன் நடந்தே புறப்பட்டார்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட நுழைவுவாயில் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தீபாவிடம் விசாரித்தனர். பின்னர் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் தாங்கள் வைத்திருந்த பணத்தை சேகரித்து வாடகை கார் ஒன்றை ஏற்பாடு செய்தனர். அந்த கார் டிரைவர், காருக்கு டீசல் மட்டும் போட்டால்போதும், வாடகை ேவண்டாம் என்று கூறி, தாயையும் குழந்தையையும் ஏற்றிக் கொண்டு கள்ளக்குறிச்சி தச்சூருக்கு சென்றார். போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் கார் டிரைவரின் இந்த சேைவயை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : Puducherry Jipmer Hospital ,Puducherry Jibmer Hospital , 22 km , Puducherry Jibmer Hospital,girl,walked
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் கதிரியக்க...