×

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க திருச்செந்தூர் பகுதியில் நுங்கு விற்பனை ஜோர்: தொழிலாளர்கள் பற்றாக்குறையால் வெட்ட முடியவில்லை

திருச்செந்தூர்: கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் திருச்செந்தூர் பகுதியில் நுங்கு வியாபாரம் களைகட்டி உள்ளது. பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கினர். கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனைமரம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சங்கிவிளை, நாலுமூலைக்கிணறு, என்.முத்தையாபுரம், முருகன்குறிச்சி, பிச்சிவிளை, சீர்காட்சி, தளவாய்புரம், காயாமொழி, தேரிகுடியிருப்பு, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட பல இடங்களில் ஆயிரக்கணக்கில் உள்ளன. பனைமரத்தின் நுங்கு, பதநீர் உள்ளிட்டவைகளில் நோய் எதிர்ப்பு சக்தி, மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. கோடை வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்ச்சி நிறைந்த நுங்கு, பதநீர் உள்ளிட்டவைகளை மக்கள் விரும்பி சாப்பிடுவர். திருச்செந்தூர் பஸ்நிலையம், டெலிபோன் அலுவலகம் அருகில், பஜார் பகுதி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் வியாபாரிகள் தற்காலிக கடைகள் விற்பனை செய்வர்.

தற்போது ஊரடங்கு காரணமாக மக்கள் வெளியில் நடமாட முடியாததால் நுங்கு உள்ளிட்டவைகள் விற்பனை பெருமளவு குறைந்துவிட்டது. இதையடுத்து வியாபாரிகள் லோடுஆட்டோ மூலம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நுங்கு வியாபாரம் செய்து வருகின்றனர். ஒரு நுங்கு ரூ.10க்கு விற்கப்படுகிறது. பதநீரும் தெருத்தெருவாக விற்கப்படுகிறது. கோடை வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்குகின்றனர். இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய முடியவில்லை. நுங்கு, பதநீர் சீசன் காலத்தில் மட்டும் கிடைக்கும். தற்போது லோடு ஆட்டோவில் தெருத்தெருவாகச் சென்று விற்று வருகிறோம்.

முன்பு திருச்செந்தூர் பகுதியில் இருந்த ஏராளமான பனைத்தொழிலாளர்கள் மூலம் நுங்கு உள்ளிட்டவைகளை வெட்டி விற்றோம். தற்போது போதிய ஆள் கிடைக்காததால் வெட்ட முடியவில்லை. நாகர்கோவிலில் இருந்து வரவழைத்து நுங்கு வெட்டி விற்கிறோம். ஊரடங்கால் அவர்களும் இங்கு வர முடியவில்லை. இதனால் ஊரில் இருக்கும் ஒருசில தொழிலாளர்களை வைத்து நுங்கு வெட்டி பிழைப்பு நடத்தி வருகிறோம் என்றார்.

Tags : area ,Thiruchendur , Thiruchendur, Nungu Sales, Jor
× RELATED வாட்டி வதைக்கும்...