×

சிங்கம்புணரி அருகே உணவின்றி தவிக்கும் சிறுவர்கள்

சிங்கம்புணரி: ஊரடங்கால் சிங்கம்புணரி அருகே உணவிற்காக சிறுவர்கள், முதியோர் பரிதவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலை பகுதியில் பூ கட்டும் தொழிலில் அதிகளவில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் காரைக்குடி, பொன்னமராவதி, சிங்கம்புணரி உள்ளிட்ட ஊர்களில் உள்ள கடைகள், வீடுகளில் பூ விற்பனை செய்து வருமானம் பார்த்து வந்தனர். கடந்த ஒரு மாதமாக கடையடைப்பு காரணமாக, பூ கட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கூலி வேலைக்கு செல்பவர்களும் வருமானமின்றி அவதியடைந்து வருகின்றனர். கொரோனா நோய் பரவலை தடுக்கும்விதமாக, ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இதனால் மங்கைபாகர் தேனம்மை மீளா அடியார் குழு வள்ளலார் சத்ய தர்ம சாலை சார்பில் வழங்கப்படும் மதிய உணவை பெற குழந்தைகள், முதியவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்று உணவு பொட்டலங்களை பெற்றுச் செல்கின்றனர். இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ஊரடங்கிற்கு முன்பு வரை தினமும் 50 முதல் 100 பேர் மட்டுமே மதிய உணவு சாப்பிட்டனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் 300 பேர் வரை மதிய உணவுக்காக வருகின்றனர். ஒரு வேளை மட்டும் இங்கு உணவு வழங்கப்படுகிறது. மேலும் தன்னார்வலர்கள் காலை, இரவு நேரங்களில் உணவு வழங்க முன்வர வேண்டும்’’ என்றனர்.

Tags : boys ,Lioness , The lioness, boys
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு