×

பட்டினியால் தவிக்கிறது குடும்பம் ரிக்‌ஷா தொழிலாளர்கள் வேதனை

புதுச்சேரி: புதுவையில் நாள்தோறும் ரிக்‌ஷா ஓட்டி பிழைப்பு நடத்திய தொழிலாளர்கள், தற்போது வேலையின்றி கிடப்பதால் அவர்களின் குடும்பம் மிகுந்த வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு அதிகளவில் வெளிநாட்டு, பிற மாநில சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக பிப்ரவரிக்கு பிறகு புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து முழுமையாக முடங்கியது. இதன் காரணமாக பீச், பூங்கா, படகு குழாம் உள்ளிட்டவை மூடப்பட்டன. புகழ்மிக்க வழிபாட்டு திருத்தலங்களும் மூடப்பட்டன. இதனிடையே தேசிய ஊரடங்கு 29 நாட்களாக தொடரும் நிலையில், புதுச்சேரியில் ரிக்‌ஷா தொழிலாளர்கள் மிகுந்த வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நகர பகுதியில் தினமும் ரிக்‌ஷா ஓட்டி பிழைப்பு நடத்திய தொழிலாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர். பெரும்பாலும் பிளாட்பாரங்களில் வசிக்கும் அவர்களின் குடும்பம் தற்போது பட்டினி கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச அரிசி, பருப்பு உள்ளிட்டவை கூட இக்குடும்பங்களுக்கு கிடைக்காததால் வேறு வழியின்றி மனைவி, குழந்தைகளை காப்பாற்ற தற்போது ரிக்‌ஷா வண்டிகளுடன் நகர பகுதியில் சவாரிக்கு காத்திருக்கின்றனர். இருப்பினும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இல்லாததால் சவாரிக்கு யாரும் வரவில்லை. மேலும் வாகனத்தில் செல்வோருக்கு சில விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. ஆட்டோ மற்றும் டெம்போ இயங்காத நிலையிலும் மருத்துவமனைக்கு செல்பவர்கள் கூட ரிக்‌ஷாவில் பயணிப்பதை தவிர்க்கின்றனர். இதனால் எங்களின் நிலை பரிதாபத்தில் உள்ளது என வேதனையுடன் கூறுகின்றனர்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ரிக்‌ஷா தொழிலாளிகள் கூறுகையில், வறுமையில் உள்ள எங்களது குடும்பம், நாள்தோறும் ரிக்‌ஷா ஓட்டி கிடைக்கும் வருமானத்தில்தான் பிழைத்து வந்தது. ஒரு மாதமாக வீட்டில் முடங்கியதால் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லை. இதனால் மீண்டும் தொழில் செய்ய வந்தால், கொரோனா பரவும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் யாரும் சவாரிக்கு தயாராக இல்லை. எனவே அரசு எங்களது நிலைமையை கவனத்தில் கொண்டு தேவையான உதவிகளை விரைந்து செய்ய வேண்டும் என்றனர்.


Tags : Family rickshaw workers , Hunger and rickshaw workers
× RELATED விக்கிரவாண்டி அருகே குடிநீர்...