×

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையில்லை; வைகை நீர்மட்டம் 44 அடியாக சரிவு: மதுரைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

ஆண்டிபட்டி: நீர்ப்பிடிப்பில் மழை இல்லாததால் வைகை அணையின் நீர்மட்டம் 44.57 அடியாக குறைந்துள்ளது. இதனால் மதுரை மாநகரில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, மதுரை மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயத்துக்கும் முக்கிய நீராதாரமாக உள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், வைகை அணையின் நீராதாரமான மூலவைகை ஆற்றுப்பகுதியில் மழையில்லாததால் நீர்வரத்து இல்லை. மேலும், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே வைகை அணைக்கு நீர்வரத்தாக இருந்து வந்தது.

இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டமும் சரிந்துவிட்டதால், அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. இந்த தண்ணீர் விவசாய பயன்பாட்டுக்குப் போக மிகக்குறைந்த அளவே வைகை அணைக்கு வந்து கொண்டிருந்தது. தற்போது, அந்த தண்ணீரும் அடியோடு நின்றுவிட்ட நிலையில், அணையின் நீர்மட்டம் 44.57 அடியாகக் குறைந்துவிட்டது. எனவே, இருப்பிலுள்ள தண்ணீரைக் கொண்டு கோடைகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் வேகமாகக் குறைந்து வருவதால் மதுரை மாநகர் மற்றும் சேடப்பட்டி கூட்டுக் குடிநீர் திட்ட பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க பொதுப்பணித்துறையினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். வைகை அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில், அணையிலிருந்து மதுரை மாநகர் மற்றும் சேடப்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கும் சேர்த்து விநாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் மொத்த நீர் இருப்பு 1,359 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Tags : Madurai ,collapse ,catchment area ,Vaigai , Waterproof, rainy, hand watering
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...