×

மணவாளக்குறிச்சியில் சிறுத்தை நடமாடுவதாக பொதுமக்கள் பீதி: தொடர்ந்து கொல்லப்படும் வளர்ப்பு விலங்குகள்

குளச்சல்: கொரொனா  வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வாகன இரைச்சலின்றி வெறிச்சோடி  காணப்படுகிறது. இதனால் காட்டு விலங்குகள் ஊருக்குள் நடமாட தொடங்கி உள்ளன.  மணவாளக்குறிச்சி அருகே பிள்ளையார்கோயில் பகுதியை சேர்ந்தவர் சிலுவைமுத்து  (63). கொத்தனார். வீட்டில் 2 ஆடுகள் வளர்த்து வந்தார். இந்த ஆடுகள்  கடந்த 18ம் தேதி திடீரென காலை வீட்டில் இறந்து கிடந்தன. நள்ளிரவு ஏதோ மர்ம  விலங்குகள் அந்த ஆடுகளை கடித்து குதறி உடல் உறுப்புகளை தின்று விட்டு  மீதியை அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளது. இது குறித்து சிலுவை முத்து  மணவாளக்குறிச்சி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்படி போலீசார்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

மேலும் வேளிமலை  வனத்துறை அதிகாரி புஷ்பராஜன், பூதப்பாண்டி வன காப்பாளர் பிரபாகரன்,  உதவியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடம் சென்று இறந்த ஆடுகளை  பார்வையிட்டதுடன் தரையில் பதிந்த கால் தடங்களையும் ஆய்வு  செய்தனர். அது எந்த விலங்கின் கால் தடம் என்று தெரியவில்லை. தொடர்ந்து கால்  தடத்தை ஆய்வு கூடத்தில் ஆய்வு செய்வதற்காக வனத்துறையினர் புகைப்படம்  எடுத்து சென்றனர். ஆய்வு அறிக்கை வந்த பின்னர் தான் அது எந்த  விலங்கு என்று அடையாளம் கூற முடியும் என வனத்துறையினர் கூறினர். இந்த  நிலையில் மறுநாள் தட்டான்விளையில் ஒரு வீட்டில் சுமார் 9 கிலோ எடையுள்ள  வான் கோழியையும் மர்ம விலங்கு பிடித்து சென்றது. 2 நாட்களுக்கு முன் தருவை நேசமணி என்பவர் வீட்டில் கட்டி போட்டிருந்த ஆடு அலறியது. வீட்டில்  உள்ளவர்கள் கதவை திறந்தபோது ஒரு மர்ம விலங்கு தப்பி ஓடியுள்ளது.

மற்றொரு  வீட்டில் ஆட்டின் மோப்பம் பிடித்து வந்த மர்ம விலங்கு ஆடு வீட்டிற்குள்  கட்டி போடப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது. நேற்று முன்தினம் இரவு  ஐ.ஆர்.இ. சாலையில் மர்ம விலங்கு ஒன்று முயலை விரட்டி சென்றதை  அந்த பகுதி மக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் கூறினர். மர்ம  விலங்கு சிறுத்தை வடிவில் இருந்ததாக பொது மக்கள் கூறினர். இதையடுத்து  வனத்துறைக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் இரவோடு இரவாக  அங்கு சென்று கூண்டு வைத்துள்ளனர். 4 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது.  சிறுத்தை ஊருக்குள் புகுந்துள்ளதாக மணவாளக்குறிச்சி பகுதி முழுவதும் தகவல்  பரவி உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் நிம்மதி இழந்துள்ள பொது மக்கள்,   ஊருக்குள் நடமாடும்  மர்ம விலங்கு புகுந்த தகவல் அறிந்து மேலும்   பீதியடைந்துள்ளனர்.

Tags : panic ,Manavalakurichi ,Panther , Bridesmaids, leopards, animals
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!