×

ஆகம விதிப்படி சித்ரா பவுர்ணமியன்று கண்ணகி கோயிலில் பூஜைகள் நடத்த வேண்டும்: அறக்கட்டளை அமைப்பு கோரிக்கை

கூடலூர்: தமிழக, கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலில் வரும் சித்ரா பவுர்ணமியன்று, ஆகமவிதிப்படி பூஜைகள் நடத்த வேண்டும் என மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட கண்ணகி கோட்டம் எனப்படும் கண்ணகி கோயில், தேனி மாவட்டம், கூடலூருக்கு தெற்கேயுள்ள வண்ணாத்திப்பாறையில், தமிழக, கேரள எல்லைப்பகுதியில் உள்ள மங்கலதேவி மலையில் 4,830 அடி உயரத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று தமிழக, கேரள பக்தர்கள் இணைந்து கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு  விழா கொண்டாடுவது வழக்கம்.

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரையில் கள்ளழகர், வீரபாண்டி கவுமாரியமன் உள்ளிட்ட சித்திரை மாதத்தில் நடைபெறும் விழாக்களை தடை செய்து, ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் செய்து கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது. ஆனால், மங்கலதேவி கண்ணகி கோயில் தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில், கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி அன்று ஆகம விதிப்படி பூஜைகள் நடத்த வேண்டும் என மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து செயலாளர் ராஜகணேஷ் கூறுகையில், ``ஊரடங்கு உத்தரவு காரணமாக மே 7ல் கண்ணகி கோயிலில் நடைபெற இருந்த சித்ரா பவுர்ணமி விழாவை நிறுத்தி வைத்து, அன்றைய தினம் சமூக விலகலைக் கடைப்பிடித்து ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் செய்வது என தீர்மானித்துள்ளோம்.

இதற்கு தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான அனுமதியை வழங்க வேண்டும். மேலும், விழா தடைபட்ட போதிலும், கோயில் வளாகத்தில் புதர்மண்டிக் கிடக்கும் செடி கொடிகளை அகற்றவும், பளியன்குடியில் இருந்து கோயில் வரை செல்லும் தமிழக வனப்பாதை மற்றும் குமுளியில் இருந்து கோயிலுக்குச் செல்லும் ஜீப் பாதை ஆகியவற்றை சீரமைக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Kannaki Temple ,Chitra Purnam ,full moon , Chitra Pournami, Kannaki Temple, Pooja
× RELATED குபேரன் அனுக்கிரகத்தை பெறுவதற்கான வழிபாடு முறை!!