×

கொரோனாக்கான சிகிச்சை அல்ல; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுர குடிநீரைப் பருகலாம்..தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுர குடிநீரைப் பருகலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய்க்கான சிகிச்சை அல்ல எனவும், பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவ ரீதியாக ஆய்வு செய்யப்பட்ட வழிமுறைகள் எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று நோயினைத் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல உத்திகளைக் கையாண்டு வருகிறது, இதன் ஒருபகுதியாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் கோவிட் -19 தொற்று நோயினை தடுப்பதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியது.

அதில் நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு வழிகாட்டுதலை வழங்கியது. தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் 11 மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் அரசு மற்றும் தனியார் துறைகளைச் சார்ந்த மூத்த இந்திய மருத்துவர்களும், மூத்த அலோபதி மருத்துவர்களும் இடம்பெற்று, ஆலோசனை செய்து அரசுக்கு தங்களுடைய பரிந்துரைகளை வழங்கினார்கள்.

அதில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவமுறைகளில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள ஆரோக்கியம் என்ற சிறப்புத் திட்டத்தின் மூலம் வழிமுறைகளை வெளியிட பரிந்துரைகளை வழங்கினார்கள்.

தமிழக முதலமைச்சர் வல்லுநர்களின் பரிந்துரைகளை ஏற்று, தமிழ்நாட்டு மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும், சிகிச்சை பெற்ற பின் உடல் நலத்தைப் பேணவும் இன்று ஆரோக்கியம் என்ற சிறப்புத் திட்டத்தினைத் தொடங்கி வைத்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதற்கும், உடல் நலம் பேணுவதற்கும், பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் சூரணப் பொட்டலங்களை வழங்கினார். வல்லுநர்களின் பரிந்துரையை ஏற்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியம் என்ற சிறப்பு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.


Tags : Kapasura ,Cure , Corona, Treatment, Immunity, Quake, Kapusura Drinking Water, Tamil Nadu Government
× RELATED கல்லீரல் கொழுப்பு நோய் குணப்படுத்துவது எப்படி?