×

திருவள்ளூர் அருகே ஏரிக்குள் கள்ளச்சாராய ஊறல்: 200 லிட்டர் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஏரிக்கரையில் உள்ள புதரில் பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்ட சாராய ஊறல் மற்றும் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை அமோகமாக நடக்கிறது. இதில், 110க்கு விற்கப்பட்ட குவாட்டர் பிராந்தி, தற்போது 700 வரையில் கள்ள சந்தையில் விற்பனையாகிறது. ஊரடங்கு உத்தரவால், வருமானம் இல்லாமல் தவிக்கும் குடிமகன்கள், அதிக விலை கொடுத்து மதுவை வாங்க முடியாமல், கள்ளச்சாராயம் குடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகிறது. அதேபோல், மது கிடைக்காத விரக்தியில் சிலர் தற்கொலை செய்கின்றனர்.

இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த படூர் ஏரியில் அடுப்பு வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக எஸ்பி அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி, மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சத்தியவாணி, எஸ்ஐ சீனிவாசன் மற்றும் போலீசார் படூர் ஏரியில் நேற்று காலை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது ஏரிக்குள் உள்ள புதரில் 2 பேரல்களில் 200 லிட்டர் சாராயம் விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். அதனுடன் ஒரு பேரலில் 200 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், உபகரணங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சாராயம் காய்ச்சியவர்கள் யார் என தீவிரமாக விசாரிக்கின்றனர்.


Tags : lake ,Tiruvallur , hiruvallur, lake, counterfeit
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு