×

சாலமங்கலம் கிராமத்தில் வாலிபருக்கு கொரோனா: கிராம எல்லைகளுக்கு சீல்

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியத்தில் 42  ஊராட்சிகள் உள்ளன. தற்போது கிராம ஊராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். குன்றத்தூர் ஒன்றியம் ஊராட்சிகளில் கிருமி நாசினி தெளிப்பு, பிளீச்சிங் பவுடர் தெளிப்பு, முககவசம், கையுறை அணிவது மற்றும் கை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில் குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம் ஊராட்சி லட்சுமி நகரை சேர்ந்த 30 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

அவரது தாய், தந்தை ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து போலீசார், சாலமங்கலம் ஊராட்சி எல்லைகளை மூடி சீல் வைத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. இதனை கலெக்டர் பொன்னையா நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, அனைவரும் முககவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags : plaintiff ,Salamangalam ,village , Salamangalam Village, Waliber, Corona, sealed to village boundaries
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...