×

தலித் இளைஞரைத் தாக்கிய எஸ்ஐ மீது நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

செங்கல்பட்டு: தாய்க்கு மருந்து வாங்க சென்ற இளைஞரை சாதிய வன்மத்துடன் தாக்கிய எஸ்ஐ மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், எஸ்பிக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது. செங்கலபட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் வடப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர் மணிகண்டன் (20) என்பவர்,  தனது தாய்க்கு மூட்டுவலிக்கான மருந்து வாங்குவதற்காகக் கடந்த 13ம் தேதி பைக்கில் சென்றுள்ளார். அப்போது, ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், மணிகண்டனை  வழிமறித்து விசாரித்துள்ளனர்.

அதற்கு அவர், தனது தாய்க்கு மருந்து வாங்க செல்வதாகக் கூறியுள்ளார். ஆனால் போலீசார், அதனை பொருட்படுத்தாமல், மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர் இதில் படுகாயமடைந்த மணிகண்டன் மயங்கி விழுந்துள்ளார். மயக்கத்தில் இருந்த அவரை, கூவத்தூர் காவல் நிலையம் அழைத்து சென்று, எஸ்ஐ சரவணனிடம் ஒப்படைத்துள்ளனர். அவர், மணிகண்டனிடம் ‘‘நீ என்ன சாதி என்று கேட்டுள்ளார். அவர், தலித் என கூறியதும், ஆத்திரமடைந்த எஸ்ஐ, சாதி குறித்து இழிவான வார்த்தைகளை கூறி  சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் வலிப்பு  ஏற்பட்டு கீழே விழுந்த மணிகண்டனை, போலீசார் அவரது  கிராமத்திற்கு அருகில் சாலையில்  வீசி சென்றனர்.

இதையடுத்து, கிராம மக்கள் மணிகண்டனின் தாய்க்கு தகவல் தெரிவித்து, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கெண்டு சென்று, அவசர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு, 4 நாட்களுக்கு பின் சுய நினைவு திரும்பியது. இதையடுத்து மணிகண்டன், நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதுகுறித்து மணிகண்டனின் தாய் ஜெயலட்சுமி, செங்கல்பட்டு எஸ்பியிடம் எழுத்துப்பூர்வமாகப்  புகார் அளித்துள்ளார். ஆனால், எஸ்ஐ சரவணன் மற்றும் காவலர்கள் மீது  எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டுக்குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு புகார் அளிக்கவரும் பொது மக்களிடம், கூவத்தூர் எஸ்ஐ சரவணன், சாதி ரீதியான  அணுகுமுறையுடனும், வன்மத்துடன் நடந்து கொண்டு தாக்குதல் நடத்துவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இப்பிரச்னையில் எஸ்பி தலையிட்டு, எஸ்ஐ சரவணன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Marxist Communist , Dalit Youth, SI, Marxist Communist
× RELATED சிறப்பு குழு ஆளுநரை தேர்வு செய்யும்:...