×

ரேபிட் கிட் சோதனை நிறுத்தம் 32 ஆயிரம் கருவிகள் நிலை என்ன?

சென்னை: தமிழகத்தில் ரேபிட் கிட் டெஸ்ட் பரிசோதனை நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 32 ஆயிரம் கருவிகள் நிலை என்ன என்று தெரியாத நிலை உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க வருகிற மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மதிக்காமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆனாலும், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்வதில் தாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து விரைவாக பரிசோதனை நடத்துவதற்காக மத்திய அரசு, சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கருவியை பல லட்சம் கொள்முதல் செய்தது. இந்த கிட் ஒன்றின் விலை ரூ.600. தமிழகத்திற்கும் 34 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவியை மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதையடுத்து சேலம், சென்னை உள்ளிட்ட சில நகர் பகுதிகளில் ரேபிட் கிட் மூலம் கடந்த சில நாட்களாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், பெரும்பாலும் தவறான தகவல்களே வெளியாகிறது என்ற குற்றச்சாட்டை ராஜஸ்தான் மாநில அரசு பகிரங்கமாக அறிவித்தது. இதேபோன்று பல்வேறு மாநிலங்களில் இருந்தும் குற்றச்சாட்டு எழுந்ததால் மத்திய அரசு நேற்று ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

அடுத்த 2 நாட்களுக்கு நாடு முழுவதும் ரேபிட் கிட் மூலம் பரிசோதனை செய்ய வேண்டாம். தொண்டையில் சளியை எடுத்து பரிசோதனை செய்யும் பிபிஆர் டெஸ்ட் மட்டுமே நடத்த வேண்டும்’’ என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை நேற்று முதல் நிறுத்தப்பட்டது.இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ”தமிழகத்திற்கு 34 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் வந்துள்ளது. அவைகளில் 2 ஆயிரம் கருவிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவு தொடர்ந்து நேற்று முதல் ரேபிட் கிட் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படவில்லை. நோய் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களுக்கு பிசிஆர் டெஸ்ட் மட்டுமே செய்யப்படுகிறது” என்றார்.

இதன்மூலம் தமிழகத்தில் தற்போது கையிருப்பில் உள்ள 32 ஆயிரம் ரேபிட் கிட் கருவியின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகள் பலவும், சீனாவில் இருந்து ரேபிட் கிட் கருவியை பல கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்துள்ளது. அந்த நாடுகளும், இந்த கருவி மீது கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது தென்கொரியாவில் இருந்து பல்வேறு நாடுகளில் ரேபிட் டெஸ்ட் கிட் கருவியை இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Rapid Kid Test ,Thousand Tools Rapid Kid Test , Rapid Kid, Corona
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...