×

பல தோல்விகளுக்குப் பிறகு முதல் முறையாக ராணுவ செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது ஈரான்

டெஹ்ரான்; ஈரானின் முதல் ராணுவ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் முடிவடைந்தது. இதை தொடர்ந்து அமெரிக்கா ஆளில்லா குட்டி விமானத்தை ஏவி ஈராக்கில் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இருநாடுகள் இடையே பதற்றும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஈரான் நாடு பாயம் மற்றும் டோஸ்டி என இரு செயற்கைக்கோள்களை தனித்தனியே ஏவியது. ஆனால், இவை இரண்டும் தோல்வியை தழுவியது. தொடர்ந்து, கடந்த பிப்ரவரியில் ஜபார்- 1 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஏவப்பட்டது. அதை வட்டப்பாதையில் நிறுத்தும் முயற்சியில் ஈரான் தோல்வியடைந்தது.  

பல தோல்விகளை சந்தித்த நிலையில், ஈரான் தற்போது ராணுவ செயற்கைக்கோள் ஒன்றை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இது தொடர்பாக ஈரான் துணை ராணுவப்படை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறியிருப்பதாவது: நூர் அல்லது வெளிச்சம் எனப்படும் ஈரான் செயற்கைக்கோள் மெசஞ்சர் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணை எட்டியுள்ளது. ஈரான் ஏவிய முதல் ராணுவ செயற்கைக் கோளான இது, தற்போது பூமியின் மேற்பரப்பில் 425 கிமீ தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது.  மத்திய பாலைவன பகுதியில் இருந்து இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறுகையில் வெகுதொலைவுக்கு பாய்ந்து செல்லும்  ஈரான் ஏவுகணை திட்டத்தின் முன்னோக்கிய பயணம் இது,’ என குறிப்பிட்டுள்ளது. கண்டங்களுக்கு இடையே அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் ஏவுகணைக்கு உதவும் வகையில், இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளதால் ஐரோப்பா நாடுகள் கவலை அடைந்துள்ளன.


Tags : Iran ,defeats , Military Satellite, Iran, USA
× RELATED ஈரானில் சிக்கிய 40 மீனவர்கள் சென்னை திரும்பினர்