×

மாநில நிதி உரிமையை மீட்டெடுக்க மத்திய அரசை வலியுறுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பை முதல்வருக்கு வழங்கிட திமுக எம்.பிக்கள் தயார்: மு.க.ஸ்டாலின்

சென்னை: மாநில நிதி உரிமையை மீட்டெடுக்க மத்திய அரசை வலியுறுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பை முதல்வருக்கு வழங்கிட திமுக எம்.பிக்கள் தயார் என்று திமுக தலைவர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  மாநிலத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிராக - மத்திய வரிகளில் தமிழ்நாட்டிற்கு வெறும் 1928.56 கோடி மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. பிரதமருக்கு நான் நேரடியாகக் கடிதம் எழுதி “2011 மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக் கொள்வது” உள்ளிட்ட மாநிலங்களின் நிதி உரிமையை வஞ்சிக்கும் நிதிக்குழுவின் ஆய்வு வரம்புகளை நீக்க வேண்டும் என்றும், 1971 மக்கள் தொகை அடிப்படையில் நிதிப் பகிர்வினை செய்திட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.

பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத பத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி எனது கோரிக்கைக்கு வலுசேர்த்தேன். ஆனால் அந்தநேரத்தில் மக்களவையில் 37 உறுப்பினர்கள்- மாநிலங்களவையில் 13 உறுப்பினர்கள் என்று 50 எம்.பிக்களுடன் மத்திய அரசுடன் கூட்டணியாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, என்ன நினைத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் - எவ்வித அழுத்தமும் கொடுக்காமல் - வெறும் கடிதம் எழுதினால் போதும் என்று அமைதி காத்திருந்தார்.15-வது நிதிக்குழு ஆய்வு வரம்பு குறித்து விவாதிக்க கேரள அரசு கூட்டிய தென்மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டை புறக்கணித்தார். இதன் விளைவாக - ஐந்தாண்டுகளுக்கு நிதிப் பகிர்வினை அளிக்க வேண்டிய நிதிக்குழு ஒரேயொரு ஆண்டுக்கு மட்டும் (2020-21) நிதிப் பகிர்வினை அளிக்கும் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்து - மாநில அரசுகளுக்கு மத்திய வரிகளில் இருந்து பகிர்ந்தளிக்க வேண்டிய நிதியினை 42 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாகவும் குறைத்துவிட்டது.  

நிதிப் பகிர்விற்குப் பிறகும் வருவாய் பற்றாக்குறையை சந்திக்கும் 14 மாநிலங்களுக்கு பரிந்துரைத்த மானியத்தில்கூட தமிழ்நாட்டிற்கு வெறும் 4025 கோடி மட்டுமே பரிந்துரைக்கப்பட்டது. மத்திய வரி வருவாய் தொகுப்பிற்கு தமிழகமோ - தென்னிந்திய மாநிலங்களோ அளிக்கும் பங்களிப்பிற்கு ஏற்றதொரு நிதிப்பகிர்வினை 15-வது நிதிக்குழு பரிந்துரைக்கவில்லை. மாறாக, தென் மாநிலங்கள் மூலம் கிடைக்கும் அதிகப்படியான வரி வருவாய், வடமாநிலங்களுக்குச் செல்லும் வகையிலேயே இடைக்காலப் பரிந்துரை அமைந்துவிட்டது. அந்த மிக மோசமான பாதிப்பின் எதிரொலியாகவே தற்போது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு 16.02 சதவீதத்தின் அடிப்படையில் 7376.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் நேரத்தில் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வினை மேலும் அதிகரித்து -  இப்போதாவது தாமதமாகவேனும் விழித்துக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக இதற்குத் தேவையான அழுத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசுக்கு கொடுக்க முன்வர வேண்டும். மாநில நிதி உரிமையை மீட்டெடுக்க, மத்திய அரசை வலியுறுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பை முதல்வருக்கு வழங்கிட தி.மு.க. எம்.பிக்கள் என்றைக்கும் தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : MPs ,DMK ,state ,government ,MK Stalin ,CM , corona, State Finance, Central Government, DMK MP, MK Stalin
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...