×

ஊரடங்கால் இந்தியாவில் காற்றுமாசு பெருமளவில் சரிவு: நாசா வெளியிட்டது செயற்கைக்கோள் படம்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கால், காற்று மாசு பெருமளவில் குறைந்து, இந்தியாவே சுத்தமாகி உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசால் நாடு முழுவதும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில், நாட்டில் 500 பேர் பாதிக்கப்பட்ட நிலையிலேயே ஊரடங்கு உத்தரவு கடந்த மாதம் 24ம் தேதி அமல்படுத்தப்பட்டு, ஏப்.14ல் இது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்க்கொண்டுள்ளது ஒருபுறம் இருந்தாலும், இதனால் ஒரு சில நன்மைகளும் நடந்துள்ளன.

கங்கை நதி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தூய்மை அடைந்துள்ளது. சாலைகளில் இருக்கும் மரங்கள் பளிச்சென்று காட்சி அளிக்கின்றன. இவை எல்லாம் இதற்கு முன்பு எங்கிருந்தன என்று கேட்கும் அளவுக்கு, சிறு, சிறு பறவைகள் முதல் பெரிய பறவைகள் வரை சர்வசாதாரணமாக நகரங்களில் உலா வருகின்றன. இப்படி பல அதிசயங்களுக்கு இடையே காற்றும் பெருமளவில் சுத்தம் அடைந்துள்ளது. அதாவது ஊரடங்கால் அனைத்து வகை வாகனங்களின் இயக்கமும் பெருமளவில் நின்றுள்ளது. மேலும், தொழிற்சாலைகளும் இயங்கவில்லை. இதனால் காற்றில் மாசு கலப்பது பெரிதும் குறைந்துள்ளது. இதை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது.

கடந்த மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதிக்கு இடையில், அமெரிக்க செயற்கைக்கோள்கள் எடுத்த புகைப்படங்களில், வட இந்தியாவில் காணப்படும் காற்றுமாசின் (ஏரோசோல்)  அளவு இதுவரை காணப்படாத அளவிற்குக் குறைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் பதிவு செய்யப்படாத மிகக் குறைந்த அளவு காற்றுமாசு மதிப்பீடு இந்த ஆண்டுதான் பதிவாகியுள்ளது என்று நாசா கூறியுள்ளது. இதன் மூலம் காற்று மாசுவுக்கு முக்கியக் காரணம் மனிதர்கள்தான் என்று தெள்ளத்தெளிவாக தெரியவந்துள்ளது. நாசாவின் மார்ஷல் விண்வெளி விமான மையத்தின் பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சி சங்கத்தின் (யுஎஸ்ஆர்ஏ) விஞ்ஞானி பவன் குப்தா கூறுகையில், ‘‘ஊரடங்கின் போது காற்று மாசு குறையும் என்பது எதிர்பார்த்ததுதான்.

ஆனால், இந்த ஆண்டு இந்தோ-கங்கை சமவெளியில் ஏரோசல் மதிப்புகள் மிகக் குறைவாக இருக்குமென்று விஞ்ஞானிகள் யாருமே எதிர்பார்க்கவில்லை, எனினும், இது மகிழ்ச்சி தரும் உண்மை’’ என்று கூறினார். காற்று அசுத்தமாக இருந்தபோது, மனிதர்கள் அனைவரும் முகக்கவசம் எதுவுமின்றி அதில் உலா வந்தோம். இப்போது காற்று மிக சுத்தமாக இருக்கிறது. ஆனால், மனிதர்கள் யாரும் அதை சுவாசிக்க முடியாமல், முகக்கவசங்களை அணிந்து வீட்டுக்குள் உள்ளோம்.

Tags : collapse ,India ,NASA , Curfew, India, Airspace, NASA, Satellite Image
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...